Jul 8, 2025 - 07:05 PM -
0
யாழ்ப்பாணம், செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 56 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் 50 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 13 ஆவது நாளாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில் இன்று (08) முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வரும் இரண்டாவது அடையாளப்படுத்தப்பட்ட இடத்திலே மூன்று மனித என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவை இன்றைய தினம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது, நாளை (09) குறித்த மூன்று எலும்புக்கூடுகளும் மீட்டெடுக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலாம் இலக்கமிடப்பட்டுள்ள அகழ்வுப்பணி இடம்பெறும் இடத்தில் மனித உடைகள், சப்பாத்து என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன அவை இன்னும் அகழ்ந்தெடுக்கப்படவில்லை.
இன்றைய தினம் பாதிக்கப்பட்டோர் சார்பில் சம்பவ இடத்திற்கு வருகைதந்த சட்டத்தரணி க.சுகாஷ் சர்வதேச ரீதியிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் குறித்த மனித எச்சங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்த முறைப்பாட்டாளர் கிருபாகரனும் சம்பவ இடத்திற்கு வந்து தனக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவது தொடர்பிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
--