Jul 9, 2025 - 06:38 PM -
0
அமானா வங்கி தனது அறிமுக Executive Leadership Development Programme (ELDP) எனும் உள்ளக 15 வார பயிற்சித் திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்துள்ளது. நிறுவனத்தினுள் தூர நோக்குடைய தலைவர்களை இனங்கண்டு அவர்களைத் தயார்ப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் அமைந்துள்ளது. கனிஷ்டநிலை நிறைவேற்று அதிகாரிகளுக்கு தமது தொழில் நிலையில் சிறப்பாக இயங்கவும், வங்கியினுள் நிறைவேற்று நிலைகளுக்கு உயர்வதற்கு அவசியமான அனுபவத்தை பெற்றுக் கொடுக்கும் வகையிலும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தை பூர்த்தி செய்த 15 ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் BMICH இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் உட்பட முகாமைத்துவ குழுவின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.
ELDP இல் தொழில்நிலை சுழற்சி ஒப்படைகள், தொழிற்பயிற்சி, விசேடத்துவ பயிற்சி, பயிற்சிப் பட்டறைகள் மற்றும் தலைமைத்துவ திறன்களை மேம்படுத்த செயற்திட்ட அடிப்படையிலான பயிற்சிகள், மூலோபாய சிந்தனை மற்றும் தீர்மானமெடுக்கும் ஆற்றல்கள் போன்றன அடங்கியிருந்தன. ஊடாடு (interactive) பயிலல், தக்க நேர கைகோர்ப்பு மற்றும் வலைப்பின்னல்கள் போன்றவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், பல்வேறு பிரிவுகள் மற்றும் அலகுகளிடையிலான செயற்பாடுகள் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு பங்குபற்றுனர்கள் வெளிப்படுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. அதன் போது, ஒவ்வொரு பங்குபற்றுனருக்கும் ஒரு ஆலோசனை வழங்குனர் ஒதுக்கப்பட்டு, வழிகாட்டல்கள் வழங்கப்பட்டதுடன், அவர்களின் முன்னேற்றமும் கண்காணிக்கப்பட்டது.
மேற்குறித்த நிகழ்வில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் உரையாற்றுகையில், “நிறுவனத்தினுள்ளே எதிர்கால தலைவர்களை உருவாக்குவது என்பதில் அமானா வங்கியைச் சேர்ந்த நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்த Executive Leadership Development Programme என்பது, திறமையாளர்களை கட்டியெழுப்புவதற்கும், எமது அணி அங்கத்தவர்களை பெருமளவு பொறுப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு வலுவூட்டுவதற்குமான எமது அர்ப்பணிப்புக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இந்த திறமையான தனிநபர்கள் வளர்ச்சியடைந்து, வங்கியின் எதிர்காலத்துக்காக புதிய தலைமைத்துவ நிலைகளில் திகழ்வதை காண்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 25 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.