Jul 11, 2025 - 12:23 PM -
0
தமிழ் சினிமாவில் தனது வெகுளித்தனமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் காமெடி நடிகர் சத்யன். இளையராஜாவின் இசையில் வெளியான இளையவன் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், ஹீரோவாக பெரிய வரவேற்பு பெறாததால் காமெடி நடிகராக மாறினார்.
நண்பன், துப்பாக்கி, நவீன சரஸ்வதி சபதம் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சத்யன் குறித்து அளித்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலாஜி பிரபு தனது பேட்டியில், சத்யனின் தந்தை மாதம்பட்டி சிவக்குமார் ஒரு பெரும் ஜமீன்தார் என்றும், 5 ஏக்கர் வீடு, 500 ஏக்கர் தோப்பு உள்ளிட்ட பல கோடி மதிப்பிலான சொத்துகளுக்கு சொந்தக்காரர் என்றும் தெரிவித்தார்.
மாதம்பட்டியில் சிவக்குமாரை ‘ராஜா’ என்றும், சத்யனை ‘குட்டி ராஜா’ என்றும் அழைப்பார்களாம். சினிமா மீது கொண்ட காதலால் படத் தயாரிப்பில் இறங்கிய சிவக்குமார், தான் தயாரித்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார்.
இதனால், சொத்துகளை விற்று படங்களைத் தயாரித்தார். ஒரு கட்டத்தில் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிவக்குமார் சில ஆண்டுகளுக்கு முன் காலமானார்.
தந்தையின் மறைவுக்குப் பின், சத்யன் தனது சொந்த ஊரை விட்டு சென்னைக்கு குடிபெயர்ந்து தற்போது அங்கு வசித்து வருகிறார்.சத்யனின் இந்தப் பின்னணி குறித்த தகவல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, சினிமா கனவுக்காக போராடி, இன்று காமெடி நடிகராக வெற்றி பெற்ற சத்யனின் பயணம் பலருக்கு உத்வேகம் அளிக்கிறது.
அவரது நடிப்புத் திறமையும், எளிமையான அணுகுமுறையும் தமிழ் சினிமாவில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது.