Jul 11, 2025 - 02:50 PM -
0
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 T20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில், ஏற்கனவே நடைபெற்ற 3 T20 போட்டிகளில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது T20 போட்டி மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து மகளிர் அணி, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அந்த அணியின் சோபியா அதிகபட்சமாக 22 ஓட்டங்கள் சேர்த்தார். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீ சரணி, ராதா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 17 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 127 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதனால் இங்கிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி T20 போட்டி நாளை நடைபெறுகிறது.
நேற்றைய ஆட்டத்தில் இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் சாதனை பட்டியல் ஒன்றில் இடம் பிடித்துள்ளார். அதாவது, சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியலில் சோபி எக்லெஸ்டோன் இணைந்துள்ளார்.
சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் 300இற்கும் மேற்பட்ட சர்வதேச விக்கெட்டுகளை வீழ்த்திய வீராங்கனைகள் பட்டியல்:-
ஜூலன் கோஸ்வாமி - 355
கேத்ரின் ஸ்கைவர்-பிரண்ட் - 335
எலிஸ் பெல்லி - 331
ஷப்னிம் இஸ்மாயில் - 317
அனிசா முகமது - 305
தீப்தி சர்மா - 301
சோபி எக்லெஸ்டோன் - 300