Jul 11, 2025 - 05:26 PM -
0
தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடியாகக் கருதப்படும் 3.9 பில்லியன் ரூபாய் வெட் வரி மோசடியைச் செய்ததற்காக பிரதிவாதியான தொழிலதிபர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை அங்கீகரித்து மேன்மூறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று (11) உறுதி செய்தது.
தண்டனை பெற்ற பிரதிவாதியான மொஹமட் குதுப்தீன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு எதிராக சட்டமா அதிபர் அண்மையில் தாக்கல் செய்த மனு தொடர்பில் தீர்ப்பு வழங்கி உயர் நீதிமன்றம் இன்று (11) இந்த உத்தரவை பிறப்பித்தது.
அர்ஜுன ஒபேசேகர மற்றும் சோபித ராஜகருணா ஆகிய நீதியரசர்களின் இணக்கத்துடன் உயர் நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா இந்த தீர்ப்பை வழங்கினார்.
அண்மையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொண்ட போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, தமக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிசெய்து, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதிவாதியின் கோரிக்கை பராமரிக்கத்தக்கது அல்ல என்று சுட்டிக்காட்டினார்.
வெட் வரி மோசடி தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட குறித்த பிரதிவாதி உள்ளிட்ட மூன்று பேர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மேன்முறையீடுகளுக்கான தீர்ப்பு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக பிரதிவாதிகளுக்கு மேல் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட தண்டனை அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுட்டிக்காட்டியிருந்தார்.
இருப்பினும், பிரதிவாதியான மேல்முறையீட்டாளர் மொஹமட் குதுப்தீன், குறித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு தொடர்பிலான உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒத்திவைத்திருந்ததாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குறித்த மனுவைத் தாக்கல் செய்த பிரதிவாதி, மேல் நீதிமன்ற விசாரணையைத் தவிர்த்து நாட்டை விட்டு வெளியேறிய ஒருவர் என்றும், இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோருவதற்கு அவருக்கு சட்டப்பூர்வ தகுதி இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வாதிட்டார்.
எனவே, பிரதிவாதி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்யும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் உயர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தார்.
இந்த வாதங்கள் தொடர்பில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையிலான உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய அமர்வு, மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதற்கு மனுதாரர் சட்டப்பூர்வ தகுதியைக் கொண்டிருக்கவில்லை என்று கூறியது.
இது நீதித்துறை செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய உயர் நீதிமன்றம், அத்தகைய நடவடிக்கைகள் சட்டத்தால் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியது.
அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்த தண்டனை மற்றும் அபராதத்தை உறுதி செய்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தீர்ப்பை உறுதி செய்வதாகவும், இந்த வழக்கில் மேலும் எந்த மனுக்களையும் பரிசீலிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் உயர் நீதிமன்றம் வலியுறுத்தியது.
தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடியாகக் கருதப்படும் இந்த வழக்கில், 2002 நவம்பர் 15, முதல் 2004 டிசம்பர் 15, வரை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறவிட வேண்டிய 3.9 பில்லியன் வெட் வரி பணத்தை மோசடி செய்ததற்காக மூன்று குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்தது கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பிரதிவாதிகளும் நீதிமன்றத்தை புறக்கணித்து தப்பிச் சென்று, பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்த போதும், மேன்முறையீட்டு நீதிமன்றம் அவற்றை நிராகரித்து மேல் நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்தமை குறிப்பிடத்தக்கது.

