Jul 12, 2025 - 03:51 PM -
0
தற்போதைய வறட்சியான வானிலை காரணமாக உயரமான பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் சிக்கல்கள் இருந்தால், பவுசர்களைப் பயன்படுத்தி குடிநீர் விநியோகிக்கப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் மிகவும் வறட்சியான வானிலை காரணமாக, நீர் ஆதாரங்களில் நீர் மட்டம் வேகமாகக் குறைந்து வருவதாக அதன் பிரதி பொது முகாமையாளர் வஜிரா திராணகம தெரிவித்தார்.
அதன்படி, வாகனம் கழுவுதல், தோட்டக்கலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற நடவடிக்கைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்துவதைக் குறைத்து, அத்தியாவசிய அன்றாட நடவடிக்கைகளுக்கு மட்டும் நீரை பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதி பொது முகாமையாளர், பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.
"மழைப்பொழிவு குறைந்து, அதிக வெப்பநிலை நிலவுவதால், மக்களின் நீர் நுகர்வு வேகமாக அதிகரித்து வருகிறது.
இருப்பினும், நீர் வழங்கல் சபையின் உற்பத்தி நடவடிக்கைகள் முன்பை விட அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன.
எங்கள் பிற நிறுவனங்களுடன் இணைந்து சுத்தமான நீர் முகாமைத்துவத்தை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம், அதேநேரத்தில் மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இதற்கமைய எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்க்கலாம்.
ஒருவேளை உயரமான பகுதிகளுக்கு தண்ணீர் வராமல் போகலாம்.
எங்கள் நீர் கோபுரங்களில் நீர் மட்டம் குறையும் போது இந்த நிலைமை ஏற்படலாம்.
இருப்பினும், உயரமான பகுதிகளுக்கு நீர் வழங்க ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாங்கள் பவுசர்களைப் பயன்படுத்தி இந்தப் பணியைச் செய்கிறோம்." என்றார்.