Jul 13, 2025 - 03:13 PM -
0
மட்டக்களப்பில் விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையில் முக்கிய வீதிகள் மற்றும் வீதி சுற்று வட்டப் பகுதிகளில் வீதிகளில் பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் வாகனங்களை நிறுத்தி சோதனை நடவடிக்கை ஒன்றை நேற்று (12) இரவு மேற்கொண்டதையடுத்து மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
மட்டக்களப்பில் கடந்த சில காலங்களாக தொடர்ச்சியாக வீதி விபத்துக்கள் அதிகரித்து வருவதுடன் கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் யூன் 30 ஆம் திகதி வரையிலான 6 மாதத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை தடுப்பதற்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் வழிகாட்டலில் முக்கிய சந்திகளில் வீதியால் பயணிக்கும் வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கையை ஆரம்பித்து வைத்தார்.
இதன் முதற்கட்டமாக மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நகர் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளின் சுற்றுவட்ட பகுதியில் விமானப்படை மற்றும் பொலிஸார் இணைந்து சம்பவதினமான நேற்று (12) இரவு 7 மணி தொடக்கம் இரவு 11 மணி வரையில் அந்த வீதிகளின் ஊடாக பயணித்த மோட்டார் சைக்கிள் வாகனங்களை நிறுத்தி பாரிய சோதனை நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
--