Jul 14, 2025 - 12:26 PM -
0
ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சலிந்த ஆகிய சந்தேக நபர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்டதாக இராஜதந்திர அல்லது பாதுகாப்பு தரப்பிலிருந்து தகவல் கிடைக்கவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட 26 சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள பல பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் மலேசியா மற்றும் தாய்லாந்துக்கு புறப்பட்டுள்ளதாகவும், இந்த இரண்டு சந்தேக நபர்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மலேசியாவில் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்கள் குறித்து பொலிஸாருக்கு தற்போது தகவல் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் இதனைத் தெரிவித்தார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் தொடர்பாக தற்போது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை மலேசியாவிலிருந்து நாடு கடத்துவதா அல்லது மேலதிக விசாரணைகளை நடத்துவதா என்பது குறித்து மலேசிய அரசாங்கம் எதிர்காலத்தில் முடிவு செய்யும் என்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் குறிப்பிட்டார்.
ஜூலை 11 ஆம் திகதி மலேசியாவில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண இலங்கை பொலிஸாரின் உதவியை கோருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தேசிய மத்திய பணியகத்திற்கு தகவல் கிடைத்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, இந்த இரண்டு சந்தேக நபர்களின் புகைப்படங்கள், கைரேகைகள் உள்ளிட்டவைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் குற்றவியல் ஆவணக் காப்பகத்திற்கு அனுப்பப்பட்டு, அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், அவற்றில் 20 வயதுடைய ஒரு சந்தேக நபரின் அடையாளம் உறுதிப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
சந்தேக நபர் குறித்து மலேசியாவிற்கு தகவல் தெரிவித்த பிறகு, நாட்டின் குடிவரவு சட்டங்களின்படி அவர் தொடர்பாக மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வுட்லர் தெரிவித்தார்.

