Jul 14, 2025 - 02:31 PM -
0
இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது, ஐசிசி நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜுக்கு போட்டி சம்பளத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவருக்கு ஒரு தகுதி குறைப்பு புள்ளியும் (demerit point) வழங்கப்பட்டுள்ளது. லார்ட்ஸில் நடைபெற்று வரும் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தின் போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில், தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட்டை சிராஜ் ஆட்டமிழக்கச் செய்தார். விக்கெட்டை வீழ்த்திய பிறகு, சிராஜ் ஆக்ரோஷமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
ஆட்டமிழந்த பென் டக்கெட் பெவிலியன் திரும்பியபோது, அவருக்கு மிக அருகில் சென்று கொண்டாடியதோடு, அவர் மீது உடல் ரீதியாகவும் சிராஜ் உரசினார். இந்தச் செயல், வீரர்களுக்கான ஐசிசி நடத்தை விதிகளின் பிரிவு 2.5-ஐ மீறியதாக உள்ளது. இந்த விதியின்படி, ஒரு துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழந்ததும் அவரை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது அவரது எதிர்வினையை தூண்டக்கூடிய மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துவது குற்றமாகும்.
இந்த விதியின்படி சிராஜுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு தகுதி குறைப்பு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 24 மாதங்களில் இது அவரது இரண்டாவது குற்றமாகும், இதனால் அவரது மொத்த தகுதி குறைப்பு புள்ளிகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி குறைப்பு புள்ளிகளைப் பெற்றால், அவை இடைநீக்கப் புள்ளிகளாக (suspension) மாற்றப்பட்டு, வீரருக்குத் தடை விதிக்கப்படும்.
சிராஜ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, போட்டி ரெஃப்ரீ விதித்த தண்டனையை ஏற்றுக்கொண்டார்.
இங்கிலாந்தின் முன்னாள் அணி தலைவர் அலாஸ்டர் குக், சிராஜின் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அதற்காகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பரபரப்பான கட்டத்தில் உள்ள இந்த டெஸ்ட் போட்டியில், இது போன்ற நிகழ்வுகள் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் சரிசமமாக 387 ஓட்டங்களை எடுத்து இருந்தன. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 192 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இந்திய அணிக்கு 193 ஓட்டங்களை என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. அதை நோக்கி ஆடிய இந்திய அணி நான்காம் நாள் முடிவில் 58 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை இழந்துள்ளது.