Jul 14, 2025 - 07:07 PM -
0
தெற்கு சிரியாவின் ஸ்வீடா நகரில் ட்ரூஸ் மற்றும் பெடோயின் பழங்குடி குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்களில் குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் சிரிய உள்துறை அமைச்சகம் இன்று (14) தெரிவித்தது.
கடந்த 11 ஆம் திகதி டமாஸ்கஸ்–ஸ்வீடா நெடுஞ்சாலையில் ட்ரூஸ் காய்கறி வியாபாரி ஒருவர் பெடோயின் பழங்குடியினரால் தாக்கப்பட்டு, அவரது வாகனம் மற்றும் உடமைகள் திருடப்பட்ட சம்பவத்துடன் இந்த மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ட்ரூஸ் மற்றும் பெடோயின் குழுக்களுக்கு இடையே மோதல்கள் உருவாகி, ஸ்வீடா மாகாணத்தில் பல கிராமங்களுக்கும் பரவின.
2024 டிசம்பரில் பஷார் அல்-அசாத் ஆட்சி வீழ்ந்த பின்னர், இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் ஆட்சியைப் பிடித்ததால், அலவைட்டுகள், ட்ரூஸ் உள்ளிட்ட சிறுபான்மை குழுக்களுக்கு இடையே பதற்றங்கள் அதிகரித்துள்ளன.
மார்ச் 2025 இல் அலவைட்டுகளுக்கு எதிரான பழிவாங்கல் தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, சிறுபான்மை குழுக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் தீவிரமடைந்துள்ளது.
சிரிய உள்துறை அமைச்சகம், ஸ்வீடாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதாகவும், உள்ளூர் குழுக்களை ஒத்துழைக்குமாறும் கோரியுள்ளது.
மாகாண ஆளுநர் மௌஸ்தபா அல்-பக்கூர் மற்றும் ட்ரூஸ் மதத் தலைவர் ஷேக் ஹம்மூத் அல்-ஹின்னாவி ஆகியோர் பதற்றத்தைக் குறைக்கவும், மதவெறியைத் தவிர்க்கவும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இருப்பினும், வெளிநாட்டு விமர்சகர்கள், தற்போதைய அரசாங்கத்தின் அமைதி முயற்சிகள் வெற்றிபெறவில்லை எனக் கூறுகின்றனர்.