Jul 16, 2025 - 02:48 PM -
0
இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள், ரி20) தலைவராக பணியாற்றியவர் ரோகித்சர்மா.
அமெரிக்காவில் நடந்த ரி20 உலக கிண்ணத்தை வென்ற பிறகு ரோகித்சர்மா ஓய்வு பெற்றார்.
இதனால் ரி20 போட்டிக்கான அணியின் தலைவராக சூர்ய குமார் யாதவ் நியமிக்கப்பட்டார்.
இதற்கிடையே இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப் பயணம் செய்வதற்கு முன்பு ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதை தொடர்ந்து உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரரான வீராட் கோலியும் டெஸ்டில் இருந்து திடீர் ஓய்வு முடிவை அறிவித்தார். அவரும் ஏற்கனவே ரி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். இருவரும் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடுவதாக தெரிவித்தனர்.
ரோகித் சர்மா, வீராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வு அறிவித்தது ஆச்சரியமானது. ஏனென்றால் அவுஸ்திரேலிய பயணத்தில் இருவரது ஆட்டமும் மோசமாக இருந்ததால் தொடர் முடிந்த பிறகே இந்த முடிவை எடுத்து இருக்க வேண்டும். இங்கிலாந்து பயணத்துக்கு சற்று முன்பு தான் அவர்கள் இந்த முடிவை எடுத்தனர்.
கோலி, ரோகித் சர்மா இல்லாமல் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 3 டெஸ்ட் முடிவில் 1 - 2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்த நிலையில் கோலி, ரோகித் சர்மா ஓய்வு தொடர் பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) முதல் முறையாக மவுனம் கலைத்துள்ளது. இருவரையும் ஓய்வு பெற கட்டாயப்படுத்தியதாக வெளியான தகவலை மறுத்துள்ளது.
இது தொடர்பாக பி.சி.சி.ஐ. துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறியதாவது,
ஓய்வு பெறுவது ஒரு வீரரின் சொந்த முடிவு. கிரிக்கெட் வாரியத்தில் இருந்து யாரும் இந்த முடிவை எடுக்க கட்டாயப்படுத்த முடியாது.
நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். ரோகித் சர்மா, வீராட் கோலி இல்லாததை நாம் அனைவரும் உணர்கிறோம். ஓய்வு பெறும் முடிவை இருவரும் தாங்களாகவே எடுத்தனர். எந்த வீரரையும் ஓய்வு பெற சொல்லக்கூடாது என்பது பி.சி.சி.ஐ. யின் கொள்கையாகும். ஓய்வு அவர்களின் விருப்பமே. ஓய்வு பெறுமாறு அவர்களை கிரிக்கெட் வாரியம் கட்டாயப்படுத்த வில்லை.
அவர்களாகவே ஓய்வு பெற்றுள்ளனர். நாங்கள் எப்போதும் அவர்களுடன் இருப்போம். நாங்கள் எப்போதும் அவர்களை புகழ்பெற்ற துடுப்பாட்ட வீரர்களாக கருதுவோம். இருவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவது எங்களுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு ராஜீவ் சுக்லா கூறினார்.