Jul 20, 2025 - 10:54 AM -
0
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு தினமும் காலை 06 மணி முதல் மாலை 06 மணி வரையில் தற்காலிக பாதை ஊடாக சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் கடந்த 17 ஆம் திகதியிலிருந்து அனுமதி வழங்கியுள்ளனர்.
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு 35 வருடங்களின் பின்னர், கட்டுப்பாடுகள் இன்றி வழிபட கடந்த 27ஆம் திகதி அனுமதித்த இராணுவத்தினர் மீண்டும் 28 ஆம் திகதி பாதுகாப்பு காரணங்கள் என கூறி ஆலயத்திற்கு செல்ல அனுமதி மறுத்திருந்தனர். இந்நிலையிலே கடந்த 17ஆம் திகதியிலிருந்து ஆலயத்திற்கு செல்ல அனுமதி வழங்கியுள்ளனர்.
உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி பலாலியில் இருந்து மக்கள் வெளியேறி இருந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக காணப்பட்டது.
கடந்த 35 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள ஆலயத்திற்கு கடந்த 06 மாத காலத்திற்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்திருந்த போதிலும் கடுமையான கட்டுப்பாடுகளுடன், விசேட தினங்களில் மாத்திரம் ஆலயத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஆலயத்திற்கு மாத்திரம் செல்வதற்கு என உயர் பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியோக பாதை அமைக்கப்பட்டு, குறித்த பாதை ஊடாக மக்கள் ஆலயத்திற்கு மாத்திரம் சென்று வழிபாட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
குறித்த அனுமதியானது காலை 06 மணியிலிருந்து மாலை 06 மணி வரை மாத்திரமே அனுமதிக்கப்பட்டுள்ளமையால் ஆலயத்திற்கு வருபவர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இம்மாதம் 31 ஆம் திகதி இராஜேஸ்வரி ஆலயத்தின் திருவிழா இடம்பெறவுள்ள நிலையில் 24 மணி நேரமும் ஆலயத்திற்குச் சென்று வருவதற்கான சூழல் உருவாக்கப்பட்டாலே இரவு நேர பூஜை வழிபாடுகளை மேற்கொள்ள முடியும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மேலும் ஆலயத்தின் நான்கு புறங்களிலும் இராணுவ காவலரன்கள் காணப்படும் சூழலே நிலவிவருகிறது.
எனவே அந்த நிலையிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஆலயம் விடுவிக்கப்பட்டுள்ளது என வாய்மூலம் மாத்திரம் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் எழுத்து மூலமான ஆவணம் அரச அதிகாரிகளால் வழங்கப்பட்டால் மாத்திரம் தமக்கு உண்மையான விடுவிப்பாக அமையும் என ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டனர்.
--

