Jul 20, 2025 - 04:39 PM -
0
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள புதிய எல்லை வீதியில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆரையம்பதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் ஒருவரை 2 கிராம் 170 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் நேற்று (19) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த புதன்கிழமை சீலாமுனை பகுதியில் வைத்து தலா 210, 140, 180 மில்லிகிராம் ஜஸ் போதைப் பொருளுடன் 3 இளைஞர்களை கைது செய்தனர்.
இவர்களை 7 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றத்தில் அனுமதியை பெற்று இவர்களிடம் மேற் கொண்ட விசாரணையில் குறித்த போதைபொருள் வியாபாரி தொடர்பாக தகவல்களை வழங்கினர்.
இதனையடுத்து பொலிஸ் போதை தடுப்பு ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் புதிய எல்லை வீதியில் சம்பவதினமான நேற்று இரவு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு வியாபாரத்துக்காக ஜஸ் போதை பொருளை எடுத்து வந்த இளைஞனை கண்ட பொலிசார் சுற்றிவளைத்து கைது செய்த வியாபரியிடம் இருந்து 2 கிராம் 100 மில்லிக்கிராம் ஜஸ் போதைப் பொருளை மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட நபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
--