Jul 20, 2025 - 05:27 PM -
0
''பிளாக்மெயில்'' படத்தை முடிக்க ஜி.வி.பிரகாஷ் தனது சம்பளத்தில் பாதியை விட்டுக்கொடுத்ததாக தயாரிப்பாளர் ஜெயக்கொடி அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ''பிளாக்மெயில்'' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் தயாரிப்பாளர், ஜி.வி.பிரகாஷால்தான் படத்தை முடிக்க முடிந்ததாக கூறினார்.
அவர் கூறுகையில், "பிளாக்மெயில் படத்திற்காக நான் யாருக்காவது நன்றி சொல்ல வேண்டும் என்றால் அது ஜி.வி.பிரகாஷ்தான். நிதி நெருக்கடி காரணமாக சுமார் எட்டு நாட்கள் படப்பிடிப்பு மீதமிருந்தது. ஜி.வி.பிரகாஷ் தலையிட்டு அதை முடிக்க எங்களுக்கு உதவினார்.
தற்போது நடிகர்கள் படப்பிடிப்பு தளத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே முழு சம்பளத்தையும் கேட்பதாக நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஜி.வி. பிரகாஷ் படத்தை முடிக்க, ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 50 சதவீதம் மட்டுமே பெற்றார். நான் எப்போதும் அவருக்குக் கடமைப்பட்டிருப்பேன்'' என்றார்.
''பிளாக்மெயில்'' படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார்.
மேலும், ஸ்ரீகாந்த் , பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் ஓகஸ்ட் 1ஆம் திகதி வெளியாக உள்ளது.