Jul 21, 2025 - 12:02 PM -
0
மலையகத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றங்கள் அமைப்பதில் பாரபட்சம் கூடாது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நேற்று (20) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய இளைஞர் சேவைகள் மன்றங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் அரசியல் தலையீடு இருப்பதாகத் தெரிகிறது. மன்றத்தின் இலச்சினையை மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அவ்வாறு மாற்றப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் இது தொடர்பான அமைச்சருக்கு நான் கோரிக்கை விடுக்கிறேன்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றங்களில் அரசியலை புகுத்த வேண்டாம், மலையகத்திலும் கொழும்பு பிரதேசத்திலும் ஒரு கிராமசேவகர் பிரிவுக்கு ஒரு இளைஞர் கழகம் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில கிராமசேவகர் பிரிவுகளில் 10,000 முதல் 20,000 வரையிலான மக்கள் தொகை உள்ளது. மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளிலும், அதிகமாக உள்ள பகுதிகளிலும் ஒரே மாதிரியாக ஒரு இளைஞர் கழகத்தை மட்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறையை ஏற்க முடியாது இங்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும்.
மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் ஒவ்வொரு தோட்டப் பகுதிக்கும் ஒரு இளைஞர் கழகம் அமைக்கப்பட வேண்டும், இதில் அரசியல் தலையீடு இருக்கக் கூடாது.
இது ஜே.வி.பி.யின் இளைஞர் கழகம் அல்ல, அரசாங்கத்துடன் இணைந்து செயல்படும் ஒரு வேலைத்திட்டம்.
இந்தக் கழகங்கள் மூலம் பயிற்சிகள், உபகரணங்கள், கலாசார மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதுபோன்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் உள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றங்களை உருவாக்கியவர் ஜே.வி.பி. அல்ல, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என தெரிவித்தார்.
--