Jul 21, 2025 - 03:44 PM -
0
வவுனியா மாட்டுத்தொழுவத்திற்கு மாநகரசபையினர் முன்னெடுத்திருந்த திடீர் விஜயத்தில் போது அனுமதியின்றி மாடுகள் வெட்டப்படுவது அவதானிக்கப்பட்டிருந்தமையுடன் தொடர்ச்சியாக மாட்டுத்தொழுவம் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வருகின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மாடுகள் எண்ணிக்கை சடுதியாக குறைவடைந்து காணப்படுவதுடன் பால் உற்பத்தியும் அற்று காணப்படுகின்றது. மேலும் மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டத்திற்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதினால் மாவட்டத்தில் மாட்டிறைச்சியின் விலையும் அதிகரித்து காணப்படுன்றது.
அத்துடன் சுகாதாரமான முறையில் மாட்டிறைச்சிகள் வெட்டப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்தும் முகமாக மாநகர முதல்வர் சுந்தரலிங்கம் காண்டீபனினால் ஐவர் அடங்கிய சுகாதார குழு ஒன்று அமைக்கப்பட்டது.
சுகாதார குழு திடீர் விஜயம் ஒன்றினை முன்னெடுத்து மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்தனர்.
இதன்போது சுகாதார பரிசோதகரின் அனுமதியினை மீறி அதிகளவில் மாடு வெட்டப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தமையுடன் சுகாதார சீர்கேட்டுடன் குறித்த பகுதி காணப்பட்டமையும் உறுதிசெய்யப்பட்டது. குறித்த விஜயம் குறித்த அறிக்கை மாநகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டுள்ளமையுடன் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக மாநகரசபையினர் தெரிவித்துள்ளனர்.
இவ் சுகாதார குழுவில் முணை முதல்வர் பரமேஸ்வரன் கார்த்தீபன் தலைமையில் மாநகரசபை உறுப்பினர்களான நடராஜா தர்மத்திரனம், அப்துல் பாரி, முகமட் லரீப் மற்றும் சுகாதார பரிசோதகர் ஆகியோரே உள்ளடங்குகின்றனர்.
இதற்கு முன்னர் மாநகர துணைமுதல்வர் அவர்கள் மாட்டுத்தொழுவத்திற்கு சென்றிருந்த சமயத்தில் அங்கு சுகாதார சீர்கேடு நிலவுவதாக மாநகர முதல்வருக்கு அறிக்கை சமர்ப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
--