Jul 24, 2025 - 05:31 PM -
0
வடக்கு, கிழக்கில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதி வேண்டி மன்னார் அடம்பன் சந்தியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடம் நோக்கி இன்று (24) காலை அமைதி பேரணி முன்னெடுக்கப்பட்டது.
மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் குறித்த அமைதி பேரணி இடம்பெற்றது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள அடம்பன் சந்தியில் இன்று காலை 10 மணியளவில் குறித்த அமைதி பேரணி ஆரம்பமானது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக பயணித்தனர்.
திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்ட இடத்தை நோக்கி பேரணி சென்றடைந்தது.
குறித்த பதாதைகளில் 'எங்கே எங்கள் உறவுகள் எங்கே?', இலங்கை அசரே இது நாடா அல்லது இடு காடா?, வேண்டும், வேண்டும் சர்வதேச விசாரணை வேண்டும், மனிதனும் புதை குழிக்குள் நீதியும் புதை குழிக்குள்ளா?, சர்வதேசமே மௌனத்தை கலை' உள்ளிட்ட பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடன் அடம்பனியில் இருந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதைகுழி நோக்கி ஊர்வலமாக வருகை தந்தனர்.
அதனைத்தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் மாந்தை மனித புதை குழிக்கு முன் ஒன்று கூடி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும், மனித புதைகுழியில் மீட்கப்பட்டவர்களுக்காகவும் அஞ்சலி செலுத்தப்பட்டு சுடர் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மார்க்கஸ் அடிகளாரிடம் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் ஏற்பாட்டுக் குழு சார்பாக கையளிக்கப்பட்டது.
--