Jul 25, 2025 - 02:58 PM -
0
கொமர்ஷல் வங்கியானது இலங்கையில் நிறுவனம் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய இலத்திரனியல் வாகன வரிசையை கொள்வனவு செய்பவர்களுக்கு பிரத்தியேக லீசிங் தெரிவுகளை வழங்க, செனோக் குழுமத்தின் துணை நிறுவனமான பிரைம் ஈவி ஆட்டோமொபைல்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் கூட்டு முயற்சியை அறிவித்துள்ளது.
இந்த விசேட லீசிங் சலுகைகள் மற்றும் நலன்கள் 2025 ஆம் ஆண்டின் இறுதி வரை வழங்கப்படும் என்றும், சீனாவில் சாங்கன் ஆட்டோமொபைல் தயாரித்த E07 தீபல், S05 தீபல், L07 தீபல், S07 தீபல், K 50 பிக்-அப் மற்றும் லுமின்சாங்கன் போன்ற வாகன மாதிரிகளை உள்ளடக்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஊக்குவிப்பு காலத்தில் லீசிங் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விசேட சலுகைகளில், வாகன பெறுமதியில் 90% வரையிலான நிதியினை வழங்குதல்; வாடிக்கையாளர்களின் பணப்புழக்கங்களுக்கு ஏற்றவாறு தனிப்பயனாக்கப்பட்ட மீளச் செலுத்தும் திட்டங்கள்; காப்புறுதி கட்டுப்பணத்திற்கான எளிதான கட்டணத் திட்டங்கள்; வங்கியின் நாடு தழுவிய கிளை வலையமைப்பு மூலம் விரைவான ஒப்புதல்கள் மற்றும் காப்புறுதி பங்காளர்களுடன் இணைந்து வழங்கப்படும் சிறப்பு காப்புறுதி கட்டுப்பண விகிதங்கள் ஆகியவை அடங்கும்.
கொமர்ஷல் வங்கியானது இந்த சலுகைகளுக்கு மேலதிகமாக, இந்த ஊக்குவிப்பின் கீழ் வழங்கப்படும் அனைத்து லீசிங்குகளையும் பசுமை லீசிங்குகளாகக் கருதுவதற்கு இசைந்துள்ளது, இதனால் அந்த வகையில் வழங்கப்படும் சலுகைகளுக்கு அவை தகுதி பெறுகின்றன.
உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றான சாங்கன் ஆட்டோமொபைலுடன் இணைந்து, பிரைம் ஈவி ஆட்டோமொபைல்ஸ் ஆனது, நவீன போக்குவரத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட புதுமையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த இலத்திரனியல் வாகனங்களின் தொகுதியை வழங்குகிறது. பிரைம் ஈவி நிறுவனமானது நிலைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் வலுவான கவனம் செலுத்தி, வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்துறை புத்தாக்கங்கள் மூலம் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் அதே வேளையில், இலங்கையானது பசுமையான போக்குவரத்திற்கு மாறுவதை ஆதரிக்கிறது.
உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

