Jul 27, 2025 - 06:15 PM -
0
அல்லைப்பிட்டி பகுதியில் படுக்கையில் எரிந்த நிலையில் வயோதிபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
3 ஆம் வட்டாரம் அல்லைப்பிட்டி வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு எரிந்த நிலையில் இன்று (27) முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், வயோதிபர் வாழ்ந்த வீட்டில் இருந்து புகை வெளிவருவதை வீதியால் சென்ற அவரது உறவினர் அவதானித்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது குறித்த விபரீதத்தை அவர் கண்டுள்ளார்.
உடனடியாக அருகில் இருந்தவர்களை அழைத்து குறித்த முதியவரை மீட்க முயற்சித்துள்ளார். ஆனாலும் குறித்த முதியவர் தீயில் கருகி ஏற்கனவே இறந்துவிட்டார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கிராமசேவகர் மற்றும் பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு தீவகப்பகுதி மரணவிசாரணை அதிகாரி என். தியாகராசா சென்று சடலத்தை பார்வையிட்டதோடு, சடலம் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக குறித்த முதியவர் நடக்க முடியாத நிலையில் தனது வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.
புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்ட குறித்த முதியவர் பாவித்த பீடியின் மூலம் அவர் உறங்கும் மெத்தையில் ஏற்பட்ட தீயின் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
--