Jul 28, 2025 - 03:51 PM -
0
சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் படம் டிராப் ஆனதாக தகவல் பரவி வந்த நிலையில், அதன் உண்மை என்ன என்பதை பார்க்கலாம்.
நடிகர் சிம்பு நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் தக் லைஃப். அப்படம் படுதோல்வியை சந்தித்தது.
இதை அடுத்து சிம்பு நடிப்பில் உருவாக இருந்த புதுப்படமும் திடீரென தள்ளிப்போனது. அதனை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க இருந்தார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் அப்படத்தை தயாரிப்பதாக இருந்தது. இதனால் சிம்புவின் 49 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்தது. அந்த சமயத்தில் தான் யாரும் எதிர்பாராத விதமாக திடீரென இயக்குனர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார் சிம்பு.
இயக்குனர் வெற்றிமாறன் தான் இயக்கிய வட சென்னை படத்தில் சிம்புவை நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டு இருந்தார்.
ஆனால் சில காரணங்களால் அப்படத்தில் சிம்பு நடிக்க முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது அவர்கள் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இப்படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இப்படத்தின் ப்ரோமோ காட்சிகள் கடந்த மாதம் படமாக்கப்பட்டன. சிம்பு லுங்கி அணிந்தபடி அந்த ஷூட்டிங்கில் கலந்து கொண்ட புகைப்படமும் வெளியாகி வைரலானது.
சிம்பு வடசென்னை கெட்டப்பில் இருந்ததால் இது வடசென்னை இரண்டாம் பாகமா என்கிற கேள்வியும் எழுந்தது. அதன் பின்னர் விளக்கம் அளித்த வெற்றிமாறன், இது வடசென்னை இரண்டாம் பாகம் இல்லை என்பதை உறுதிப்படுத்தினார்.
இருப்பினும் இந்தக் கதை வட சென்னை யுனிவர்சில் வருவதாகவும் அவர் கூறினார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாத இறுதியில் தொடங்கும் எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் ஷூட்டிங் தற்போது வரை தொடங்கப்படாததால் படத்திற்கு என்ன ஆனது என கேள்வி எழுந்தது.
கோலிவுட் வட்டாரத்தில் சிம்பு வெற்றிமாறன் இணையும் படம் டிராப் ஆனதாகவும் பேச்சு அடிபட தொடங்கியது. இது பற்றி வலைப்பேச்சு குழு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி சிம்பு வெற்றிமாறன் படம் டிராப் ஆகவில்லை என்றும் தற்போது அப்படத்திற்கான செட் அமைக்கும் வேலைகள் நடைபெற்று வருவதால் ஷுட்டிங் தாமதமாகி உள்ளதாகவும், ஆகஸ்ட் 15 ஆம் திகதி முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும் கூறியுள்ளனர். ஆடி மாதம் என்பதால் ஷூட்டிங்கை தொடங்கவில்லை என்கிற பேச்சும் அடிபடுகிறதாம்.
அதுமட்டும் இன்றி இப்படத்தில் நாயகனாக நடிக்க முதலில் சம்பளம் வாங்காமல் படத்தின் லாபத்திலிருந்து பங்கு வாங்கிக் கொள்வதாக கூறியிருந்தாராம் சிம்பு. ஆனால் தற்போது திடீரென தனக்கு 45 கோடி ரூபாய் சம்பளம் வேண்டும் எனக் கேட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. இதுவும் அப்படம் தாமதமாவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.