வணிகம்
விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பெற உதவுவதற்காக கொமர்ஷல் வங்கியும் ஹேலிஸ் அக்ரிகல்ச்சர் நிறுவனமும் பங்குடைமை

Jul 29, 2025 - 12:38 PM -

0

விவசாயிகள் நவீன தொழில்நுட்பத்தைப் பெற உதவுவதற்காக கொமர்ஷல் வங்கியும் ஹேலிஸ் அக்ரிகல்ச்சர் நிறுவனமும் பங்குடைமை

கொமர்ஷல் வங்கியானது ஹேலிஸ் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தால் (Hayleys Agriculture) வழங்கப்படும் உயர்தர விவசாய இயந்திரங்களில் முதலீடு செய்யும் விவசாயிகளுக்கு தனிப்பயனாக்கப்பட்ட லீசிங் மற்றும் கடன் வசதிகளை வழங்குவதற்காக, ஹேலிஸ் அக்ரிகல்ச்சருடன் பங்குடைமையை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் விவசாயத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், நவீன விவசாய சாதனங்களை நியாயமான விலையில் பெறுவதை நோக்கமாகக்கொண்டு இந்த திட்டமானது வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இந்த பங்குடைமையின் கீழ், ஹேலிஸ் அக்ரிகல்ச்சரிடமிருந்து டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் பிற விவசாய சாதனங்களை கொள்வனவு செய்யும் விவசாயிகள், கொமர்ஷல் வங்கியிடமிருந்து சிறப்பு விவசாய லீசிங் மற்றும் திரிபல பசுமை அபிவிருத்திக் கடன்களுக்குத் தகுதி பெறுவார்கள். இந்த திட்டமானது பயிர் சுழற்சிகளுடன் இணைக்கப்பட்ட நெகிழ்வான மீளச் செலுத்தும் விதிமுறைகள், முன்னுரிமை வட்டி வீதங்கள் மற்றும் விரைவான செயலாக்கம் ஆகியவற்றைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளதுடன் இது இயந்திரமயமாக்கல் மற்றும் உற்பத்தித்திறனை ஊக்குவிக்கும் அதே வேளையில் விவசாய சமூகங்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கின்றது. 

இந்த முயற்சித் திட்டமானது விவசாயிகள் எதிர்கொள்ளும் மூலதனக் கட்டுப்பாடுகளைக் கணிசமாகக் குறைக்கும் என்றும், விவசாயிகளை உழைப்பு மிகுந்த பாரம்பரிய முறைகளிலிருந்து திறமையான, தொழில்நுட்பம் சார்ந்த நடைமுறைகளுக்கு மேம்படுத்த உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, பயிர் விளைச்சலை அதிகரிக்கவும், செயல்பாட்டுச் செலவுகளைக் குறைக்கவும், தேசிய மற்றும் பிராந்திய மட்டங்களில் உணவுப் பாதுகாப்பு நோக்கங்களை ஆதரிக்கவும் எதிர்பார்க்கப்படுவதாக வங்கி தெரிவித்துள்ளது. இந்த பங்குடைமை தொடர்பாக கருத்து தெரிவித்த கொமர்ஷல் வங்கியின் தனிநபர் வங்கியியல் பிரிவு பிரதிப் பொது முகாமையாளர் திரு.எஸ்.கணேசன், ஹேலிஸ் அக்ரிகல்ச்சர் உடனான இந்தக் கூட்டு முயற்சியானது, கிராமப்புற வாழ்வாதாரத்தை வலுப்படுத்துவதற்கும் விவசாயத் துறையில் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்குமான எமது உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. இந்தப் பிரிவில் வளர்ச்சி மற்றும் மீள்தன்மையை ஏற்படுத்துவதற்கு விவசாய உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம் என்பதை நாம் அங்கீகரிக்கிறோம், என்றார். 

ஹேலிஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டிங்ஸ் லிமிடெட்டின் முகாமைத்துவப் பணிப்பாளரான திருமதி ஜெயந்தி தர்மசேன தெரிவிக்கையில், ஹேலிஸ் அக்ரிகல்ச்சர் எப்போதும் விவசாய சமூகத்தை புத்தாக்கம் மற்றும் அணுகல் மூலம் மேம்படுத்த பாடுபடுகிறது. கொமர்ஷல் வங்கி போன்ற நம்பகமான நிதியியல் பங்காளருடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், மேம்பட்ட இயந்திரமயமாக்கலை மேலும் அணுகக்கூடியதாகவும் நியாயமான விலையிலும் நாம் உருவாக்குகிறோம். 

இலங்கை விவசாயிகளுக்கு குறைந்த இயந்திரமயமாக்கல் நிலைகளும் வரையறுக்கப்பட்ட கடன் அணுகலும் முக்கியமான சவால்களாக உள்ளன என்பதை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொண்டதன் மூலம் இந்த முயற்சியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டமானது மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான அணுகலை உள்ளடக்கிய நிதியியல் தீர்வுகளுடன் இணைப்பதன் மூலம், விவசாய சமூகங்களை மேம்படுத்துவதையும், மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் நிலையான விவசாய நிலப்பரப்பை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது. 

மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05