Aug 2, 2025 - 10:16 AM -
0
உலகின் மிகவும் இயங்கும் நிலையில் உள்ள எரிமலையாக கருதப்படும் இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபியில் (Lewotobi) வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இரண்டு இரட்டை சிகரங்களை கொண்ட குறித்த மலையின் லக்கி லக்கி பகுதியில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நாட்டு நேரப்படி, நேற்றிரவு 8.48 அளவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இயங்கும் எரிமலையில் இருந்து சாம்பல் புகையானது 10 கிலோமீற்றர் உயரத்திற்கு வானில் பரவியுள்ளதாக இந்தோனேசிய எரிமலை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, எரிமலையின் கீழ் பகுதியில் 6 முதல் 7 கிலோமீற்றருக்குள் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ள சூழலில் கனமழை பெய்தால் எரிமலையிலிருந்து வெளியேறும் எரிமலைக்குழம்பு காரணமாக, மண்சரிவு ஏற்படக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
குறித்த எரிமலை வெடிப்பு சமீபத்தில் பல சந்தர்ப்பங்களில் பதிவாகியிருந்தது.
இதனால் பாலி தீவுக்கான சர்வதேச விமான சேவைகள் கடந்த ஜூலை மாதம் பல சந்தர்ப்பங்களில் தாமதமாக சென்றதுடன் ரத்து செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.