Aug 2, 2025 - 04:09 PM -
0
18 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த தொடர் குறித்து பல அணிகளின் நிர்வாகங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
ஒவ்வொரு அணி நிர்வாகமும் அடுத்த ஐ.பி.எல் தொடருக்காக தங்களது அணிகளை தற்போதே தயார்படுத்தும் வேளையில் இறங்கி உள்ளன.
ஏற்கனவே ராஜஸ்தான் அணியிலிருந்து சஞ்சு சம்சனை சென்னை அணி வாங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மற்ற அணிகளும் பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களின் மாற்றங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றன.
இந்தநிலையில் தமிழக வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் இந்த வருட ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார்.
எனினும், அவர் 2 போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
10.75 கோடி இந்திய ரூபாய்க்கு வாங்கப்பட்டாலும், அவர் வெறும் 2 போட்டிகளில் மட்டுமே களமிறக்கப்பட்டார்.
இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
நடராஜன் தற்போது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் பயிற்சி முகாமில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
அதிலும் சென்னை அணியின் டீ-ஷர்ட்டுடன் காணப்படும் படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
இது ஐ.பி.எல். ரசிகர்கள் மத்தியில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த தொடருக்கு முன்னர் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலிருந்து விலகி அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைய உள்ளாரா? அல்லது சிஎஸ்கே அவரை வாங்க உள்ளதா?
இல்லையெனில் வேறு எதுவும் காரணமா? என்று சமூக வலைதளத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.