Aug 3, 2025 - 10:09 AM -
0
பாலியல் குற்றச்சாட்டு வழக்கு ஒன்றில், மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் முன்னாள் எம்பியும், முன்னாள் பிரதமருமான தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ரேவண்ணாவை குற்றவாளி என தீர்ப்பளித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்துள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா மீது மைசூரு கே.ஆர்.நகரைச் சேர்ந்த பெண் ஒருவர், பிரஜ்வல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடளித்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி, அதை தமது கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
இதனையடுத்து பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பியதும், கடந்த ஆண்டு மே மாதம் பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்தனர்.
இதன்போது, அவரது கையடக்க தொலைபேசியில் 2,000க்கும் மேற்பட்ட ஆபாச காணொளிகள் இருந்தமை கண்டறியப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்துவரும் மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஆண்டின் இறுதியில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது
குறித்த வழக்கில் கிடைக்கப்பெற்ற சாட்சியங்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜனபட் நேற்று முன் தினம் தீர்ப்பளித்தார்.
இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வேண்டும். இது எதிர்காலத்தில் இதுபோன்ற செயலில் ஈடுபடுவோருக்கு பாடமாக இருப்பதுடன் பெண்களுக்கு பாதுகாப்பாக நீதிமன்றம் இருக்கிறது என்ற நம்பிக்கை ஏற்படுத்தும் என்று வாதிட்டனர்.
பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு அதிக பட்ச தண்டனையாக சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்தார். உரிய சட்ட அடிப்படையில் அவரது எஞ்சிய வாழ்நாளை சிறையில் கழிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் குற்றவாளி மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதால் தலா 5 லட்சம் ரூபாய் என மொத்தம் ரூ.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
இதில் 7 லட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் ஹாசன் சட்ட சேவைகள் ஆணையம் மூலம் 11 லட்சம் ரூபாவை பாதிக்கப்பட்ட பணிப்பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தமது தீர்ப்பில் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.