Aug 3, 2025 - 10:44 AM -
0
சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான 2வது இருபதுக்கு 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்டுக்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பாகிஸ்தான் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஹசன் நவாஸ் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சியில் ஜேசன் ஹோல்டர் 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இந்தநிலையில், 134 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி, போட்டியின் இறுதிப் பந்தில் வெற்றியிலக்கை அடைந்தது.
போட்டியில் வெற்றி பெறுவதற்கு இறுதிப் பந்தில் 3 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜேசன் ஹோல்டர், அந்தப் பந்தில் 4 ஓட்டங்களை விளாசி, அணிக்கு திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்ததுடன், சிறப்பாட்டக்காரராகவும் தெரிவானார்.
இதனையடுத்து மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் தொடரில் சமனிலை பெற்றுள்ளது.
குறித்த தொடரின் மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.