Aug 3, 2025 - 12:01 PM -
0
அவுஸ்திரேலியாவில் இன்று இடம்பெற்று வரும், பாலஸ்த்தீனத்திற்கு ஆதரவான போராட்டம் ஒன்றில், விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவும் பங்கேற்றுள்ளார்.
காசாவில், இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், பாலஸ்த்தீன மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், குறித்தப் போராட்டத்தில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சேவும் இணைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், அங்கு அவருக்கு உரையாற்றுவதற்கு வாய்ப்பேதும் வழங்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.
அமெரிக்க தேசிய ஆவணங்களை பெற்று, அதனை வெளியிட சதி செய்ததாக 53 வயதான அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது.
இதனையடுத்து ஐந்து ஆண்டுகளாக பிரித்தானிய சிறையில் இருந்த அசாஞ்சே, அங்கிருந்து அவர் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடி வந்தார்.
நீண்ட கால சட்டப் போராட்டத்திற்கு பின்னர், விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே தன் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை அமெரிக்க அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டு, அதுதொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, அவர் கடந்த ஆண்டு விடுதலையாகி பிரித்தானியாவில் இருந்து தமது சொந்த நாடான அவுஸ்திரேலியாவை அடைந்தமை குறிப்பிடத்தக்கது.