Aug 3, 2025 - 02:51 PM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிலாவத்தை தெற்கு பகுதியில் இன்று (03) காலை, இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் அமைதியான முறையில் கலந்து கொண்டனர்.
வடக்கு - கிழக்கு பகுதிகளில் அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்புகள், மத சுதந்திர மீறல்கள் மற்றும் பிற வன்முறைகளைத் தடுக்க, மக்கள் எதிர்பார்க்கும் சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி, மூன்றாவது நாளாக இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் சிலாவத்தையில் நடைபெற்றது.
அத்துடன், வடக்கு - கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் அடுத்த 100 நாட்களுக்கு சுழற்சி முறையில் இதே குழுவினரால் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தின் இறுதியில், அவர்களின் கோரிக்கைகளை உள்ளடக்கிய மகஜர் ஒன்று வாசிக்கப்பட்டது. மகஜரில் குறிப்பிடப்பட்டவை பின்வருமாறு,
நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவு - 5ஆவது ஆண்டுஇலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு அவசியமாகும்.1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து, 75 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் இனவாத அரசியலே மேலோங்கி நிற்கிறது.
சிங்களப் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசாங்கங்களாலும், தலைவர்களாலும் இலங்கை ஆளப்பட்டு வருகிறது. 1908 முதல் வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையகத் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை.
மாறாக, மொழி மற்றும் மத அடிப்படையிலான அடக்குமுறைகள் தொடர்ந்தன. சுதந்திரம் பெற்று ஒரு வருடம் நிறைவடைவதற்குள், 1948 நவம்பரில் மலையகத் தமிழர்களுக்கு எதிராக பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடக்கு - கிழக்கில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், 1950 களில் கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறைகள், சுதந்திரத்திற்கு பின்னரான அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிப்பு ஆகியவை இடம்பெற்றன.
1956 இல் அமுலுக்கு வந்த தனிச் சிங்களச் சட்டம் அரச கட்டமைப்பை சிங்களமயமாக்கியது. இதனால், வடக்கு - கிழக்கு தமிழர்கள் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை கோருவதற்கு காரணமாக அமைந்தது.சிங்கள அரசாங்கங்கள் பல உறுதிமொழிகளை வழங்கினாலும், பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும், அவை நிறைவேற்றப்படவில்லை.
மாறாக, இனவாதமும் அடக்குமுறைகளும் அதிகரித்து, இறுதியில் தமிழின அழிப்பு யுத்தத்தில் முடிந்தது. போருக்குப் பின்னர், அரசியல் தீர்வு குறித்து அரசாங்கங்கள் அக்கறை காட்டவில்லை. திடமான அரசியல் தீர்வுக்கான உரையாடல்கள் முன்னெடுக்கப்படாமல், தமிழ் மக்களின் அரசியல் தளம் வெறுமையாக உள்ளது.
இந்நிலையை மாற்ற, 2022 ஆகஸ்ட் 1 ஆம் திகதி 'நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல் முனைவு' ஆரம்பிக்கப்பட்டது.
வடக்கு - கிழக்கின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் 100 இடங்களில் இந்த ஜனநாயக மக்கள் திரள் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு, 2022 நவம்பர் 8 ஆம் திகதி 'சமஷ்டி அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்துடன்' நிறைவடைந்தது.
தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 'ஜனநாயகம்', 'நட்டமைப்பு மாற்றம்', 'இன-மத பேதமின்மை' எனும் கொள்கைகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்துள்ளது. இருப்பினும், அரசியல் தீர்வு குறித்து மௌனம் காத்து வருகிறது. வடக்கு - கிழக்கில் இராணுவமயமாக்கல், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு, மகாவலி குடியேற்றம், சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியவை தொடர்கின்றன.
இவற்றை வைத்து 'இன-மத பேதமின்மை' பற்றி அரசு பேசுவது நேர்மையற்ற செயலாகும். 2015 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1 இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக கையொப்பமிட்டு, அரசியல் அதிகாரப் பகிர்வு குறித்த கடப்பாட்டை ஏற்றுள்ளது. ஆகவே, பழைய அரசாங்கங்களைப் போலல்லாமல், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிலையான, கௌரவமான, உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் நிர்வாகத் திட்டத்தை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என கோருகிறோம்.
சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல, மாறாக உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும்.
போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் நாடுகள், நேபாளம் உள்ளிட்டவை, சமஷ்டி முறையைப் பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்தி வருகின்றன. 70 ஆண்டுகளுக்கு மேலான இன அடக்குமுறைகளையும், 30 ஆண்டு கால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட வடக்கு - கிழக்கு மக்களுக்கு, இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே பொருத்தமான அரசியல் தீர்வாகும். இதுவே தமிழ் மக்களின் திடமான அரசியல் அபிலாஷையாகும் என்பனவாகும்.
--