Aug 4, 2025 - 04:40 PM -
0
சுற்றுலா இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வதும், இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் இறுதி நாளான இன்று வெற்றிக்கு 35 ஓட்டங்களே தேவை என்ற நிலையில், தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 367 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
இந்தப் போட்டியில் தமது இரண்டாம் இன்னிங்ஸ்க்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 396 ஓட்டங்களுக்குள் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
இதனையடுத்து இங்கிலாந்து அணிக்கு 374 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இங்கிலாந்து அணி சார்பில் ஜோ ரூட் 105 ஓட்டங்களையும், ஹரி புருக் 111 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்து இங்கிலாந்து அணியை தோல்வியில் இருந்து வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
எனினும் 35 ஓட்டங்களுக்குள் எஞ்சியுள்ள 4 விக்கட்டுக்களையும் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய இந்திய பந்து வீச்சாளர்கள், இங்கிலாந்து மண்ணில் வெற்றியை பதிவு செய்தனர்.
இந்திய அணி சார்பில் பந்துவீச்சியில் மொஹமட் சிராஜ் 5 விக்கட்டுக்களையும், பிரதிஷ் கிருஷ்ணா 4 விக்கட்டுக்களையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர்.
இதன்படி 5 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில், இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளை வென்றதுடன், ஒரு போட்டி சமனிலையில் நிறைவடைந்தது.
இந்தநிலையில் குறித்த தொடர் 2-2 என்ற அடிப்படையில் சமனிலையில் நிறைவடைந்துள்ளது.