Aug 4, 2025 - 06:09 PM -
0
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஏழு வெளிநாட்டவர்கள் உட்பட எட்டு பேருக்கு நேற்று முன்தினம் (2) ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சவுதி பத்திரிகை முகமை (SPA) இன் அறிக்கையின்படி, நான்கு சோமாலியர்களும் மூன்று எத்தியோப்பியர்களும் நஜ்ரான் பகுதியில் ஹஷீஷ் கடத்திய குற்றத்திற்காகவும், ஒரு சவுதி குடிமகன் தனது தாயைக் கொலை செய்த குற்றத்திற்காகவும் தூக்கிலிடப்பட்டனர்.
2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல், சவுதி அரேபியாவில் 230 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளனர்.
இது 2023இல் தொடங்கப்பட்ட "போதைப்பொருளுக்கு எதிரான போர்" என்ற கொள்கையின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த மரண தண்டனைகளின் அதிகரிப்பு, குறிப்பாக வெளிநாட்டவர்களுக்கு எதிராக, சர்வதேச மனித உரிமை அமைப்புகளான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மற்றும் ரிப்ரீவ் ஆகியவற்றின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவர்கள், போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது என்றும், வெளிநாட்டவர்கள் நியாயமற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.