Aug 5, 2025 - 12:14 PM -
0
பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜய்ர் பொல்சனாரோவை (Jair Bolsonaro) வீட்டுக்காவலில் வைக்க அந்த நாட்டு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பொல்சனாரோ தோல்வியடைந்த நிலையில், பிரேசிலின் புதிய ஜனாதிபதியாக லூயிஸ் இனாசியோ லுலாடி சில்வா (Luiz Inacio Lula da Silva)தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தலில் தோல்வியடைந்த போதும் ஜனாதிபதி பதவியில் இருந்து விலக பொல்சனாரோ மறுத்து, தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக தமது ஆதரவாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.
எனினும் இறுதியில் புதிய ஜனாதிபதியாக இனாசியோ லுலாடி சில்வா பதவியேற்றார்.
இதனிடையே, தேர்தல் தோல்வியை ஏற்கமறுத்தல், தேர்தல் முடிவுகளை மாற்ற முயற்சி, புதிய ஆட்சியை கவிழ்க்க சதி உட்பட பல்வேறு பிரிவுகளில் பொலிஸார் பொல்சனாரோ மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், பொல்சனாரோ மீதான வழக்கு நேற்று உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், அதில் பொல்சனாரோவை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து பொல்சனாரோவின் வீட்டிற்கு சென்ற பாதுகாப்புப்படையினர் அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். அத்துடன் அவரது தொலைபேசி உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

