Aug 5, 2025 - 02:05 PM -
0
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வௌியாகியுள்ள கிங்டம் திரைப்படத்திற்கு தடைவிதிக்குமாறு மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கு திரைப்படமான கிங்டம், ஈழத்தமிழர்களை மிக மோசமாக சித்தரித்து காட்டுவதாக அவர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தங்கள் தாயகத்தின் இறையாண்மையை மீட்டெடுக்க 30 ஆண்டு காலம் மறப் போராட்டத்தை நடத்திய ஈழத் தமிழ் மக்கள் அதற்காக கொடுத்த விலை அதிகம்.
லட்சக்கணக்கான மக்கள் இந்தப் போரில் உயிரிழந்துள்ளனர்.
வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும், ஈழத் தமிழர்களையும் தவறாக சித்தரித்து திரைப்படங்கள் வெளியிட்டு வரலாற்றை சிதைக்கின்ற முயற்சி கடும் கண்டனத்திற்குரியது என வைகோ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் கிங்டம் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
”கிங்டம் திரைப்படம் ஈழ சொந்தங்களை குற்றப்பரம்பரை போல, மிகத் தவறாக வகையில் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் தமிழ்த்தேசிய இனத்தின் வரலாற்றை தவறாக சித்தரிக்கலாம் என நினைப்பதை அனுமதிக்க முடியாது.
வரலாற்றில் நடந்திராத ஒன்றை நடத்ததாக காட்டி, ஈழ மக்களை மிக மோசமாக சித்தரிக்கும் இப்போக்கு கண்டனத்திற்குரியது” எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.