Aug 5, 2025 - 05:21 PM -
0
கொமர்ஷல் வங்கியானது வங்கியின் பசுமைக் கடன்கள் மற்றும் பசுமை லீசிங் வசதிகள் மூலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வுகளை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதற்காக, தந்திரி டிரெய்லர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் (Tantri Trailers (Pvt) Ltd) துணை நிறுவனமான தந்திரி எனர்ஜியுடன் (Tantri Energy) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கைச்சாத்திட்டுள்ளது. நிலையான எரிசக்தி முறைமைகளில், குறிப்பாக சூரிய சக்தியில் முதலீடு செய்ய விரும்பும் தொழில் புரியும் மற்றும் சுயதொழில் புரியும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான நிதியியல் தெரிவுகளை வழங்குவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
இந்த பங்குடைமையானது கொமர்ஷல் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர்கள் ஏழு ஆண்டுகள் வரை முன்னுரிமை வட்டி வீதத்தில் நிதியுதவி பெற உதவுகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, எரிசக்தி திறன், உமிழ்வு குறைப்பு, நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம், கழிவு முகாமைத்துவம், எரிசக்தி திறன் கொண்ட வீட்டு உபகரணங்கள் மற்றும் ஒளியமைப்பு முறைமைகள் தொடர்பான பிற உபகரணங்களுடன் சூரிய சக்தி தொகுதியை ஜசோலார்ஸ கொள்வனவு செய்வதற்கான செலவில் ஒரு பகுதிக்கான நிதியை வழங்கும் வகையில் வங்கி பசுமைக் கடன்கள் மற்றும் பசுமை லீசிங் வசதிகளை வழங்குகிறது.
இந்த ஊக்குவிப்பானது மே 31, 2026 வரை இடம்பெறவுள்ளதுடன் மேலும் இது கொமர்ஷல் வங்கியின் வாடிக்கையாளர்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு நடைமுறைகளை ஊக்குவிப்பதற்கான பரந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகும். வங்கியின் பசுமை நிதி தயாரிப்புகள் இலங்கையின் வீடுகள் மற்றும் வர்த்தகங்களுக்கு நிலையான தெரிவுகளை மிகவும் அணுகக்கூடியதாகவும் நியாமான விலையிலும் மாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தந்திரி எனர்ஜி மூலம் சூரிய சக்தி தீர்வுகளை நிறுவதற்கு தெரிவு செய்யும் வாடிக்கையாளர்கள், தொழில்துறையில் முன்னணி உத்தரவாதத் தொகுப்பு,சூரிய ஒளிமின்னழுத்த தொகுதிகளுக்கு 30 ஆண்டு செயல்திறன் உத்தரவாதம், தொகுதிகள் மற்றும் இன்வெர்ட்டர் இரண்டிற்கும் 10 ஆண்டு உற்பத்தியாளரின் தயாரிப்பு உத்தரவாதங்கள் மற்றும் விரிவான 3 ஆண்டு முழு அமைப்பு உத்தரவாதம் ஆகியவற்றால் பயனடைவார்கள். உலகின் முதல் 1000 வங்கிகளில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக கொமர்ஷல் வங்கி திகழ்வதுடன் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் (CSE) வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. தனியார் துறையின் மிகப்பாரிய கடன் வழங்குநராக விளங்கும் கொமர்ஷல் வங்கி, SME துறையினருக்கு பாரியளவில் கடனுதவி வழங்கும் கடன் வழங்குநராகவும் உள்ளது. மேலும் டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியில் திகழும் இவ்வங்கி இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலைமையை பேணும் வங்கியாகும். கொமர்ஷல் வங்கி நாடளாவிய ரீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பை செயற்படுத்தி வருகிறது.
மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைத்தீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட முழுமையான Tier I வங்கி மற்றும் மியன்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனத்துடன் சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் நிலையத்தில் (DIFC) பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து வங்கி அண்மையில் ஒப்புதல் பெற்றதுடன் மேலும் இந்த மைல்கல்லை எட்டிய இலங்கையில் முதல் வங்கியாக தன்னை பதிவு செய்துள்ளது, இது அதன் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க பங்கிற்கு வழிவகுத்துள்ளது. வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனமான CBC Finance Ltd. அதன் சொந்த கிளை வலையமைப்பு மூலம் பல்வேறு நிதியியல் சேவைகளை வழங்குகிறது.