Aug 5, 2025 - 05:56 PM -
0
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ஜஸ்பிரிட் பும்ரா இல்லாதது மிகவும் வருத்தமளிப்பதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜ் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் நிறைவுக்கு வந்தது.
இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்டில் இங்கிலாந்து அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி நேற்று த்ரில் வெற்றியை பெற்றது.
இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்தியா சார்பில் அபாரமாக பந்து வீசிய மொஹமட் சிராஜ், இறுதிப் போட்டியில் மாத்திரம் 9 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்த அவருக்கு, போட்டியில் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்தநிலையில் இங்கிலாந்து அணியுடனான வெற்றியின் பின்னர், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வௌியிட்டுள்ள காணொளியில் கருத்து தெரிவித்த சிராஜ், இந்தப் போட்டியில் பும்ராவை மிஸ் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
பும்ராவின் மீதும், என் மீதும் அதிக நம்பிக்கை வைத்துள்ளேன். ஹரி புரூக்கின் பிடியை தவற விட்டிருந்தேன். அது என்னை அறியாமலேயே நடந்த தவறாகும்.
எனினும் இறுதி நேரத்தில் ஆட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, கடைசி விக்கெட்டை வீழ்த்துவதற்கான வாய்ப்பு கிடைத்தமையும் மகிழ்ச்சியை தந்துள்ளதாகவும் சிராஜ் தெரிவித்துள்ளார்.