வணிகம்
செலான் வங்கியின் ரூ.15 பில்லியன் அடுக்கு II பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன் வழங்கல், தொடக்க நாளிலேயே அதிகளவில் திரட்டப்பட்டு பலமான சந்தை ஆதரவை பதிவு செய்தது

Aug 7, 2025 - 09:32 AM -

0

செலான் வங்கியின் ரூ.15 பில்லியன் அடுக்கு II பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன் வழங்கல், தொடக்க நாளிலேயே அதிகளவில் திரட்டப்பட்டு பலமான சந்தை ஆதரவை பதிவு செய்தது

செலான் வங்கியின் Basel IIIக்கு இணக்கமான அடுக்கு II பட்டியலிடப்பட்ட தொகுதிக்கடன் தொடக்க நாளில் பாரிய சந்தை வரவேற்பை பெற்று ரூ. 15 பில்லியன் வரை அதிகமாக திரட்டியது. இது வங்கியின் உறுதியான வணிக மாதிரி மற்றும் நீண்டகால தொலைநோக்குப் பார்வையில் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை எடுத்துக்காட்டுகிறது. 

ஆரம்ப வழங்கலில் ஒவ்வொன்றும் நூறு ரூபாய் பெறுமதியான, Basel IIIக்கு இணக்கமான, அடுக்கு 2, பட்டியலிடப்பட்ட, தரப்படுத்தப்பட்ட, பிணையற்ற, கீழ்நிலைப்படுத்தப்பட்ட, மீட்கத்தக்க மற்றும் மாற்ற முடியாத ஆரம்பத்தில் ஐம்பது மில்லியன் தொகுதிக்கடன்களை வழங்குவதற்கும் மேலும் 75,000,000 தொகுதிக்கடன்களை வழங்கும் தெரிவும் அதிகமாக திரட்டப்படும் சந்தர்ப்பத்தில் வங்கியின் விருப்புரிமையின் பிரகாரம் மேலதிகமாக 25,000,000 தொகுதிக்கடன்களை வழங்கும் தெரிவும் உள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ.15 பில்லியன் திரட்டப்படுகிறது. மேற்படி தொகுதிக்கடன் கொழும்பு பங்குசந்தையில் பட்டியலிடப்படும். 

செலான் வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ரமேஷ் ஜயசேகர கருத்து தெரிவிக்கையில், 

“வங்கிச் சேவை மற்றும் தேசிய பொருளாதார முன்னுரிமைகளை ஆதரிப்பதற்கு வங்கி விவேகமான மூலதன கட்டமைப்பை வலுப்படுத்துவது மிக முக்கியமானது. எங்கள் Basel III இணக்கமான தொகுதிக்கடனின் வெற்றி, குறிப்பாக இலங்கையின் வளர்ந்து வரும் SME துறையை மேம்படுத்துதல், ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சியை விரைவுபடுத்துதல், விவசாயத் துறையை முன்னேற்றுதல் போன்ற பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் துறைகளுக்கான கடன் வழங்கலை அதிகரிக்க உதவும். செலான் வங்கியின் தொலைநோக்குப் பார்வை மற்றும் எதிர்காலத்தில் அனைவரையும் உள்ளடக்கிய நிதித் துறையைக் கட்டியெழுப்புவதற்கான வங்கியின் அர்ப்பணிப்பு ஆகியவை மீது சந்தை வைத்துள்ள நம்பிக்கைக்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். என்றார். சொத்து மற்றும் பொறுப்பு பிரிவிகளுக்கிடையிலான முதிர்வு ஏற்றத்தாழ்வை குறைத்தல், இரண்டாம் அடுக்கு மூலதனத் தளத்தை வலுப்படுத்துதல் மற்றும் முக்கிய SMEகள், ஏற்றுமதிகள் மற்றும் விவசாயத் துறைகளிற்கு வங்கியின் கடன் வழங்கும் திறனை விரிவுபடுத்துதல் ஆகிய வங்கியின் மூன்று முக்கிய மூலோபாய முன்னுரிமைகளிற்காக தொகுதிக்கடனின் நிதி பயன்படுத்தப்படும். தேவை தேவைகளிற்கேற்ப மூலதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதை செலான் வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது. 

வங்கி, Fitch Ratings Lanka Ltdஆல் தேசிய நீண்டகால A+ (lka) மதிப்பீட்டைப் பெற்றுள்ளதுடன் தொகுதிக்கடன் வழங்கல் A- (lka) மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இந்த வழங்கல், ஐந்து மற்றும் பத்தாண்டு கால வரையறை மற்றும் நிலையான மற்றும் மிதக்கும் வீத தெரிவுகளுடன் கூடிய மாறுபட்ட கட்டமைப்பைக் கொண்டிருந்தது. இதில், 5 ஆண்டு காலவரையறையுடன் வருடத்திற்கு 11.25% (AER 11.25%) என்ற நிலையான வட்டியுடன் வருடாந்தம் செலுத்தத்தக்க Type A, 5 ஆண்டு காலவரையறையுடன் வருடத்திற்கு 10.80% (AER 11.25%) என்ற நிலையான வட்டியுடன் காலாண்டுக்கு செலுத்தத்தக்க Type B, 5 ஆண்டு காலவரையறையுடன் 11.50% உச்சவரம்பு மற்றும் 9.5% கீழ் வரம்புடன் 364 நாட்கள் T-bill வீதம் + 2.5%, என்ற மிதக்கும் வீதத்துடன் வருடாந்தம் செலுத்தத்தக்க Type C ஆகியவை அடங்கும். Type D, 10 ஆண்டு காலவரையறையுடன் வருடத்திற்கு 11.75% (AER 11.75%) என்ற நிலையான வட்டியுடன் வருடாந்தம் செலுத்தத்தக்கது மற்றும் Type E, 10 ஆண்டு காலவரையறையுடன் வருடத்திற்கு 11.40% (AER 11.72%) என்ற நிலையான வட்டியுடன் அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்தப்படும். நிலையான மற்றும் மிதக்கும் வீத தெரிவுகளின் கலவையானது வேறுபட்ட அபாய-மீட்சி தேவைகளை பூர்த்தி செய்கிறது. 

ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகளுடன் வங்கியின் தொடர்ச்சியான ஒருங்கிணைவு பேரின பொருளாதார ஸ்திரத்தன்மையை வளர்ப்பதில் அதன் முன்னோடிப் பங்கையும் இந்த தொகுதிக்கடன் வழங்கல் உறுதிப்படுத்துகிறது. நிலைத்தன்மை, வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் காலத்திற்கேற்ற புதுமை ஆகியவற்றில் வேரூன்றிய பயன்தகு நிதி தீர்வுகளை வழங்குவதற்கான பரந்த அர்ப்பணிப்பையும் இது பிரதிபலிக்கிறது. 

ஒழுங்கான சொத்துக்கள்/பொறுப்புக்கள் முகாமைத்துவம், புதுமையான டிஜிட்டல் வங்கி தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட சேவை மூலம் செலான் வங்கியின் நிலை மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சேவையுடன் வங்கி இப்போது உறுதித்தன்மை மற்றும் பொருளாதார மதிப்பு உருவாக்கத்தில் கவனம் செலுத்தும் வளர்ச்சி கட்டத்தில் நுழைகிறது. 

இந்த மூலோபாய உத்தி சிறந்த முடிவுகளை அளித்துள்ளது. 2024இல், சவாலான சூழ்நிலைகளின் மத்தியிலும் வங்கி ரூ.10.05 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாக (PAT) ஈட்டியதுடன் 61% வளர்ச்சி மற்றும் அதன் 36 ஆண்டுகால வரலாற்றில் இதுவரை இல்லாத அதிகபட்ச செயல்திறனை பதிவு செய்தது. 2025ஆம் ஆண்டில் இதே உத்வேகத்துடன் முதல் காலாண்டில் ரூ. 2,761 மில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாக பதிவு செய்தது. இது முன்னைய ஆண்டை விட 20.29% அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ் வழங்கல் மக்கள் வங்கியின் முதலீட்டு வங்கி பிரிவு மற்றும் First Capital Advisory Services (Pvt) Ltd ஆகியவற்றால் கூட்டாக நிர்வகிக்கப்பட்டது. 

மேலதிக தகவலுக்கு, www.seylan.lkஐப் பார்வையிடவும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05