Aug 8, 2025 - 05:24 PM -
0
தம்மை அணியில் இருந்து விடுவிக்குமாறு சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின், அணி நிர்வாகத்திடம் கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
2026ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான திட்டங்களை இறுதி செய்வதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.
சில நாட்களாக, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் சஞ்சு சம்சனின் வெளியேற்றம் தொடர்பில் கிரிக்கெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் விக்கெட் காப்பாளருக்கு சஞ்சு சம்சன் தகுதியானவர் என பேசப்பட்டு வருகின்றது.
கடந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்குத் திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின், இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐ.பி.எல் தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை.
9 போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற அவர், 7 விக்கெட்டுகளை மாத்திரமே வீழ்த்தினார். அத்துடன் சி.எஸ்.கே அணியும் பின்னடைவை சந்தித்தமையினால், அஸ்வின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
சஞ்சு சம்சன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக பல வெற்றிகளை பெற்றுள்ளார். அவர் அங்கிருந்து விலகினால் அது சி.எஸ்.கேவுக்கு சிறந்த தேர்வாக அமையும் என சமூக வலைத்தளங்களில் பேசப்படுகிறது.
அதேநேரம், ராஜஸ்தான் ரோயல்ஸில் அதிக வெற்றிகளை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றிருப்பதால் அவருக்கு அந்த அணிதான் பொருத்தமாக அமையும் என ரசிகர்கள் கருத்து வௌியிட்டு வருகின்றனர்.
இதற்கு மத்தியிலேயே தம்மை அணியில் இருந்து விடுவிக்குமாறு சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் அஸ்வின் கோரியுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.