Aug 9, 2025 - 03:24 PM -
0
மன்னாரில் 2வது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ச்சியாக மன்னார் நகர பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராம மக்கள் இன்றைய தினம் (8) பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மன்னாரில் 2வது கட்டமாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (3) அங்கு காற்றாலைகளின் பாகங்கள் எடுத்து செல்லப்பட்ட போது, மன்னார் - தள்ளாடி சந்தியில் மக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் தள்ளாடி சந்தி மற்றும் மன்னார் சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக மக்களும், பொது அமைப்புக்களும் இணைந்து சுழற்சி முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதற்கான பாகங்கள் மன்னார் நகர பகுதிக்கு பொலிஸாரின் பலத்த பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் மன்னார் பேசாலை கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் பேருந்துகள் மூலம் வந்து பேராட்டக் களத்திற்கு பிரவேசித்திருந்தனர்.
காற்றாலை அபிவிருத்தி நடவடிக்கைகளினால் அண்மையில் ஏற்பட்ட மழை காரணமாக பேசாலை கிராமம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய வெள்ள நீர் தேங்கிய நிலையில், அவற்றை கடலுக்குள் செலுத்த தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அத்துடன் கணிய மணல் அகழ்வை ஒரு போதும் அனுமதிக்க போவதில்லை எனவும், மன்னார் தீவை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் குறித்த இரு திட்டங்களையும் நிறுத்துவதற்கு, ஜனாதிபதி துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
--