மலையகம்
தொண்டமான் சிலந்தி வலையை தூசு தட்டி விடப்பட்ட காரியாலயங்களைத் தேடுகிறார்

Aug 10, 2025 - 10:24 AM -

0

தொண்டமான் சிலந்தி வலையை தூசு தட்டி விடப்பட்ட காரியாலயங்களைத் தேடுகிறார்

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான காரியாலயத்தை பொகவந்தலாவ பிரதேசத்தில் நாங்கள் திறந்து வைத்துள்ளோம். ஆனால், தொண்டமான், சிலந்தி வலையை தூசு தட்டி விடப்பட்ட மலையக காரியாலயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார் என நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்ஜுள சுரவீர ஆரச்சி தெரிவித்துள்ளார். 

நேற்று (09) பொகவந்தலாவ பிரதேசத்தில் தேசிய மக்கள் சக்தியின் கட்சி காரியாலயத்தைத் திறந்து வைத்து மக்கள் முன் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

தொண்டமான் காரியாலயங்களைத் திறப்பார், ஆனால் ஐந்து வருடங்கள் கழித்து வந்து அவற்றைத் தேடுவார். நாங்கள் மூடவில்லை, திறக்கின்றோம். இதுவே மாற்றம். நாங்கள் தெளிவான பயணத்தை முன்னோக்கிச் செல்கின்றோம். சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளைப் போல, வங்குரோத்து அடைந்த எமது நாட்டை மாற்றியமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது டொலரின் பெறுமதியை 300 ரூபாவாகக் குறைத்துள்ளோம். கடந்த காலங்களில் டொலரின் விலை காலையில் 300 ரூபாவாக இருந்தால், மாலையில் 400 ரூபாவாக உயர்ந்தது. எரிபொருள் விலை அதிகரித்தது, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தது, இறுதியில் மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு உள்ளாகினர். ஆனால், எமது அரசாங்கத்தில் அவ்வாறு இல்லை. டொலரின் விலை உயரவில்லை. இது சாதாரண விடயமல்ல, இதுவே நாட்டைப் பாதுகாப்பது. 

டொலரின் விலை குறைக்கப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் எமது நாட்டுக்கு வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து பல்வேறு வேலைத்திட்டங்கள் எமது நாட்டை வந்தடைகின்றன. வாக்களித்தவர்களுக்கு தற்போது எந்தப் பிரச்சினையும் இல்லை. 

ஆறு மாத காலப்பகுதியில் நாடு சிறந்த முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், கடந்த அரசாங்கத்தில் உள்ளவர்களால் இது முடியவில்லை. சீனாவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் போல, எமது நாட்டில் தோட்டப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க எமது அரசாங்கம் தயாராகி வருகிறது. 

ஜக்கிய மக்கள் கூட்டணி, நாட்டை இன்னும் கட்டியெழுப்ப முடியவில்லை என்கிறது. ஆறு மாத காலத்தில் நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமா? நாங்கள் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடங்கள் கூட ஆகவில்லை. நோர்வூட் பிரதேச செயலகத்துக்கு மட்டும் மக்களின் அபிவிருத்திக்காக 18 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 2,000 வீடமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிவனொளிபாத மலைக்கு வருகின்ற அடியார்களைக் கருத்தில் கொண்டு, நல்லதண்ணி வரையிலான வீதிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலா நிரூபத்தில் உள்வாங்கப்படாத தோட்டப் பகுதிகளில் உள்ள 200 வீதிகளைப் புணரமைக்க, நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டு, அரசாங்கத்துக்கு பொறுப்பேற்கப்பட்டு, அடுத்த வருடம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

76 வருடங்களாக, தொண்டமான் வாக்குகளைப் பெறுவதற்காக தோட்டப் பகுதிகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள வீதிகளை சுற்றுலா நிரூபத்தில் உள்வாங்க யோசனைகள் முன்வைக்கப்படவில்லை. கைத்தொழில் பேட்டைகளை அமைக்க வேண்டும், சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும். 

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் மலையக மக்களுக்கு நற்செய்தி வரும். மஸ்கெலிய காட்மோர் நீர்வீழ்ச்சியை மஹிந்தவும் ரணிலும் விற்பனை செய்ததால், சுற்றுலாத் துறை அமைச்சின் ஊடாக 300 மில்லியன் ரூபா செலவில் அதனை சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும். தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தீர்வு வழங்கப்படும் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05