Aug 11, 2025 - 10:29 AM -
0
காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சர்வதேச ஊடகமான அல் ஜசீராவின் 5 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
காசா நகரின் அல் ஷிஃப்பா மருத்துவமனைக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர்களுக்கான முகாம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதலில் ஊடகவியலாளரான அனஸ் அல் ஷெரிப் (Anas al-Sharif) உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் 5 பேர் அல் ஜசீரா ஊடகவியலாளர்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலுக்கு பின்னர் இஸ்ரேல் வௌியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அனஸ் அல் ஷெரிப்பை இலக்கு வைத்தே, குறித்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது.
அவர் ஹமாசின் பயங்கரவாத குழுவொன்றின் தலைவராக செயற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
குறித்த நபர் ஊடகவியலாளர் எனும் போலியான வேடத்தில் செயற்பட்டுள்ளதாகவும், அவர் பயங்கரவாத அமைப்பின் முக்கிய பொறுப்பில் தலைமை வகித்தமைக்கான ஆதாரங்களை தமது புலனாய்வு பிரிவினர் உறுதிப்படுத்திய பின்னரே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
22 மாதங்களாக இடம்பெற்று வரும் காசா போரில் ஊடகவியலாளர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல் இதுவாகும்.
இதுவரை இந்த போரில் சுமார் 200 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஊடக கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஊடகவியலாளர்கள் மீதான இந்த தாக்குதலுக்கு எதிராக அல் ஜசீரா ஊடக நிறுவனம் மற்றும் பல்வேறு நாடுகளும் தமது கண்டனங்களை வௌிப்படுத்தி வருகின்றன.