Aug 12, 2025 - 03:33 PM -
0
சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் நிறுவனம், Reliance Consumer Products Limited (RCPL) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புகழ்பெற்ற Campa பான வகை வர்த்தகநாமத்தை இலங்கையில் பெருமையுடன் அறிமுகப்படுத்துகின்றது. கடந்த ஆண்டு பெப்ரவரியில் ரிலையன்ஸ் குழுமத்தினூடாக இந்திய சந்தையில் எலிபன்ட் ஹவுஸ் பான வகை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலமாக முன்னர் ஏற்படுத்தப்பட்ட ஒத்துழைப்பை அத்திவாரமாகக் கொண்டு இரு நிறுவனங்களுக்கும் இடையில் வெற்றிகரமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ள உறவுமுறையின் அடுத்த கட்டத்தை இக்கூட்டாண்மை குறித்து நிற்கின்றது. பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற சுவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்கு, உயர் தரமான, சிக்கனமான விலைகளில் கிடைக்கின்ற பான வகைகளுடன், மகத்தான தெரிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றை இலங்கை நுகர்வோருக்கு வழங்கும் நோக்குடன் Campa ன் அறிமுகம் இடம்பெறுகின்றது.
இலங்கையில் Campa ன் அறிமுகமானது, தனது நுகர்வோர் வர்த்தகநாமங்களை முக்கிய பிராந்திய சந்தைகள் மத்தியில் விரிவுபடுத்துவதில் RCPL ன் அர்ப்பணிப்பை நீட்டித்துள்ளது. 2022 ம் ஆண்டில் Campa Cola நாமத்தைக் கொள்முதல் செய்து, 2023 ம் ஆண்டில் இந்திய நுகர்வோருக்கு அதனை மீளறிமுகம் செய்து வைத்துள்ள RCPL, 1970 கள் மற்றும் 1980 களில் அப்போதைய தலைமுறைகளின் கற்பனைகளை வசப்படுத்திய பாரம்பரிய வர்த்தகநாமத்திற்கு புத்துயிரளித்திருந்தது. விசாலமான விநியோக வீச்சு மற்றும் தொழிற்பாட்டு திறன் ஆகியவற்றுடன் ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸின் வலுவான சந்தைப் பிரசன்னத்தின் ஆதரவுடன் இவ்வர்த்தகநாமம் இலங்கையில் காலடியெடுத்து வைக்கின்றது.
ஏக்கம் மற்றும் சம்பந்தம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புத்துணர்ச்சி பெறுவதற்கான தெரிவுகளை நாடுகின்ற பரந்த வாடிக்கையாளர்கள் தளத்திற்கு தயாரிப்புக்களை வழங்குவதே இக்கூட்டாண்மையின் நோக்கம். உள்நாட்டு பான வகையில் தற்போது இப்புதிய வரவுடன், வர்த்தகநாம இருப்பினைக் கட்டியெழுப்புதல் மற்றும் சிறப்பாக நிறைவேற்றுதல் ஆகியவற்றில் நிரூபிக்கப்பட்ட ஆற்றல்களின் பக்கபலத்துடன், நேர்மையான விலை நிர்ணயம், தரம், மற்றும் வீச்சு ஆகியவற்றுடன் இப்பிரிவை வளர்ச்சி பெறச் செய்யும் நோக்கத்தை இரு நிறுவனங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
Reliance Consumer Products Ltd நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கேத்தன் மோடி அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “எமது மதிப்பிற்குரிய கூட்டாளரான எலிபன்ட் ஹவுஸ் பெவரெஜஸ் மூலமாக இலங்கைச் சந்தையில் காலடியெடுத்து வைப்பதில் நாம் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். 50 ஆண்டுகளுக்கும் முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட பாரம்பரிச் சிறப்பு மிக்க இந்திய வர்த்தகநாமமான Campa, நுகர்வோரின் அபிமானத்தையும், நேசத்தையும் தொடர்ந்தும் அனுபவித்து வருகிறது.
நீண்ட கால இலக்குடன் நாம் முதலீட்டை மேற்கொள்வதுடன், இப்பிராந்தியத்தில் விரைவான வளர்ச்சிக்கு மகத்தான வாய்ப்புக்கள் உள்ளதையும் காண்கின்றோம். புத்தாக்கமான, சர்வதேச தரம் வாய்ந்த தயாரிப்புக்களை நேர்மையான மற்றும் சிக்கனமான விலைப்புள்ளிகளில் நுகர்வோருக்கு வழங்குவதில் நாம் சிறப்பான கடந்த கால வரலாற்றைக் கொண்டுள்ளோம். இலங்கை எங்கிலும் நுகர்வோருக்கான பான வகை அனுபவத்தை மாற்றியமைப்பதற்காக எமது கூட்டாளருடன் ஒன்றிணைந்துள்ளதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். எத்தனையோ தலைமுறைகளுடனான சம்பந்தத்தை Campa Cola கொண்டுள்ளதுடன், நினைவுகளை மீட்டெடுத்து, நுகர்வோர் நேசத்திற்குரிய அத்தருணங்களை ஒரு முறை மீட்டிப் பார்ப்பதற்கு ஊக்குவிக்கின்றது. Campa என்பது வெறுமனே ஒரு பானம் மாத்திரமல்ல, அது ஒரு பாரம்பரியத்தின் மறுமலர்ச்சி, இந்தியாவின் சுவை மகிமை, இன்றைய இளம் தலைமுறையின் உற்சாகம் நிறைந்த கொண்டாட்டம். இலங்கையில் அனைத்து நுகர்வோர் பிரிவுகள் மத்தியிலும் அதன் புத்துணர்வூட்டும் சுவைக்காக ரசிகர்களின் புதிய வட்டத்தை அறிமுகப்படுத்தும் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
Campa ன் வரவு குறித்து ஜோன் கீல்ஸ் நுகர்வோர் உணவுகள் துறையின் தலைவர் திரு. தமிந்த கம்லத் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் Campa பான வகையை அறிமுகப்படுத்துவதற்காக, முன்னணி சர்வதேச கூட்டு நிறுவனங்கள் குழுமமான Reliance Consumer Products உடன் ஒத்துழைப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்கிறோம். பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள உயர் தர, பலவிதமான பான வகைகளை நுகர்வோருக்கு வழங்குவதில் எமது அர்ப்பணிப்பை இக்கூட்டாண்மை பிரதிபலிக்கின்றது. இந்த மூலோபாயக் கூட்டாண்மையானது எமது பான வகை வரிசையை விரிவுபடுத்துவது மாத்திரமன்றி, நாட்டில் போட்டிமிக்க பான வகைச் சந்தையில், ஆதிக்கம் செலுத்தும் உள்நாட்டு நிறுவனம் என்ற எமது ஸ்தானத்தையும் மேலும் வலுப்படுத்துகின்றது. எத்தனையோ தலைமுறைகளாக இந்தியாவில் தளைத்தோங்கியதைப் போல, இலங்கையிலும் Campa வர்த்தகநாமத்தை நிலைநிறுத்துவதில் எமது வலுவான விநியோக வலையமைப்பு மற்றும் சந்தை நிபுணத்துவம் ஆகியவற்றின் அனுகூலங்களை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதை நாம் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் அறிமுகமாகும் Campa தயாரிப்பு வரிசையில், Campa Cola, Lemon, Orange, மற்றும் Campa NRG Gold Boost மற்றும் Berry Kik ஆகிய புத்தூக்கி பான வகை ஆகியன அடங்கியுள்ளன. ஈர்ப்பான பொதியிடல் மற்றும் ஏக்கத்தை ஏற்படுத்தும், மற்றும் தைரியமான சுவை வடிவங்களுடன், பேரார்வத்தினால் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இன்றைய இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டு, விடாமுயற்சி மற்றும் இலட்சியம் ஆகியவற்றின் அடையாளமாக Campa நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 250மிலீ போத்தல்கள் ரூபா 100/- என்ற ஒப்பீட்டளவில் சிறந்த விலையில் கிடைக்கும் இந்த தயாரிப்பு வரிசை, அன்றாட புத்துணர்ச்சித் தேவைகளுக்கு மதிப்பு மற்றும் ஈர்ப்பு ஆகிய இரண்டுக்கும் உத்தரவாதமளிக்கின்றது. பாரம்பரியம், புத்தாக்கம், மற்றும் பிரமாண்டம் ஆகியவற்றை இக்கூட்டாண்மை கொண்டு வருவதுடன், நாடெங்கிலும் நுகர்வோரின் வாழ்வில் புத்துணர்வூட்டும் அங்கமாக மாறுவதற்கான சிறந்த வாய்ப்பினை Campa க்கு ஏற்படுத்தியுள்ளன.
Reliance Consumer Products Limited (RCPL) குறித்த விபரங்கள்:
RCPL ஆனது Reliance Industries Ltd நிறுவனத்தின் விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்புக்கள் (FMCG) அங்கமாக இயங்கி வருவதுடன், நுகர்வோரின் அன்றாட வாழ்வுக்கு வலுவூட்டும் இலக்கைக் கொண்டுள்ளது. புத்தாக்கம், மற்றும் நுகர்வோரின் திருப்தி மீது வலுவான அர்ப்பணிப்புடன், நுகர்வோருடன் எதிரொலிக்கும் தயாரிப்புக்களைத் தோற்றுவிக்கும் அதேசமயம், நேர்மையான விலையிலும், கைக்கெட்டும் தூரத்திலும் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக அவற்றை வழங்குவதற்கு சர்வதேச தராதரங்கள் மற்றும் உள்நாட்டு நுண்ணறிவுகளையும் Reliance Consumer Products ஒன்றுகலக்கிறது. Reliance Industries Ltd ன் வலுவான கட்டமைப்பு மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் பக்கபலத்துடன், நுகர்வோர் மத்தியில் மாற்றம் கண்டு வருகின்ற தேவைகளை நிறைவேற்றி, சமூகங்களுடன் நீண்ட கால உறவுகளை கட்டியெழுப்பி, மற்றும் தேசத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதற்கான தீர்வுகளை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கம். குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் பலவிதப்பட்ட தேவைகளை நிறைவேற்றி, உலகத்தரம் வாய்ந்த, நம்பிக்கைமிக்க, மற்றும் மதிப்பினால் முன்னெடுக்கப்படுகின்ற தீர்வுகளை வழங்கி, தற்காலத்து நுகர்வோரின் பரிணாம மாற்றம் கொண்ட வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும் வண்ணம் நுகர்வோர் பொருட்கள் துறையின் எதிர்காலத்தைச் செதுக்கும் பயணத்தை Reliance Consumer Products முன்னெடுத்து வருகின்றது.
சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் குறித்த விபரங்கள்
எலிபன்ட் ஹவுஸ் வர்த்தகநாமத்தின் உற்பத்தியாளரும், விநியோகஸ்தருமான சிலோன் கோல்ட் ஸ்ரோர்ஸ் பிஎல்சி, 7 பரந்த துறைகளில், 70 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கி வருகின்ற, கொழும்பு பங்குச் சந்தையில் நிரற்படுத்தப்பட்டுள்ள மிகப் பாரிய கூட்டு நிறுவனங்கள் குழுமமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனங்களில் ஒன்றாகும். 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன், 14,000 க்கும் மேற்பட்டோருக்கு ஜோன் கீல்ஸ் குழுமம் வேலைவாய்ப்புக்களை வழங்கியுள்ளதுடன், கடந்த 18 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘மிகவும் நன்மதிப்புப் பெற்ற நிறுவனம்’ ஆக தரப்படுத்தப்பட்டுள்ளது. Transparency International Sri Lanka ஆல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக Transparency in Corporate Reporting Assessment ல் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச பொருளாதார சபையின் பூரண உறுப்பினராகவும், ஐநா சர்வதேச உடன்படிக்கையின் பங்கேற்பாளராகவும் திகழ்ந்து வரும் JKH, ஜோன் கீல்ஸ் பவுண்டேஷன் ஊடாக “Empowering the Nation for Tomorrow” என்ற தனது நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நோக்கத்தை சிறப்பாக முன்னெடுத்து வருகிறது.

