Aug 12, 2025 - 03:57 PM -
0
தென்மராட்சி மட்டுவிலில் அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையம் செப்ரெம்பர் இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
மட்டுவிலில் அமைந்துள்ள கைத்தொழில் நிலையத்தினை இன்று காலை பார்வையிட்ட அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர், ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அதனை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதன்போது வர்த்தகர்கள் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் ம.பிரதீபன் மாநகர சபை ஆணையாளர், அமைச்சின் அதிகாரிகள் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த அரசாங்கம் பல தடவைகள் ஆரம்பிப்பதாக தெரிவித்த மட்டுவில் பொருளாதாரம் மத்திய நிலையம் அடுத்த மாதம் இறுதிக்குள் திறந்து வைக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும் வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்பு பிரச்சினைகள் பொருளாதார மத்திய நிலையத்தில் காணப்படும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அமைச்சர்களின் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
பொருளாதார மத்திய நிலையம் திறந்து வைத்தல் தொடர்பாகவும் முல்லைத்தீவில் இராணுவத்தினால் ஒருவர் கொலை செய்யப்பட்டதாக சந்தேகப்படும் விடயம் தொடர்பாகவும் அது தொடர்பில் முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் தொடர்பாகவும் ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
--