Aug 13, 2025 - 10:37 AM -
0
மடுமாத ஆலயத்தின் ஆவணி திருவிழா எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் வடக்கு மாகாணத்தின் பல பாகங்களில் இருந்தும் இன மத பேதமின்றி மடு திருத்தலம் நோக்கி பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர்.
இவ்வாறு பாதயாத்திரை செல்லும் ஒரு தொகுதி பக்தர்கள் கடந்த 11 ஆம் திகதி பாண்டியன்குளம் நட்டாங்கண்டல் பகுதியை வந்தடைந்தனர்.
எதிர்வரும் 15 ஆம் திகதி மடு அன்னையின் ஆவணி திருவிழா நடைபெறவுள்ள நிலையில் வடக்கில் உள்ள மாவட்டங்களில் இருந்து மக்கள் ஒவ்வொரு வருடமும் நடைபயணம் மேற்கொண்டு மடு திருத்தலம் நோக்கி பாதாயாத்திரையாக செல்வது வழமை.
அதே போல் இம்முறையும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடக்கின் பல பாகங்களிலிருந்தும் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு, இரணைப்பாலை வற்றாப்பளை பகுதிகளில் இருந்து கட்டம் கட்டமாக மக்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்ய நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இதேவேளை யாழ்ப்பாணம் கரவெட்டி, துன்னாலை சதாசகாய மாதா ஆலயத்திலிருந்து கடந்த 08 ஆம் திகதி நடைபயணம் மேற்கொண்டிருந்த பக்தர்கள் நேற்று (12) காலை நட்டாங்கண்டல் பகுதியை வந்தடைந்துள்ளனர்.
இவ்வருடம் அதிகளவான மக்கள் நேர்த்தி கடன்களை நிறைவுசெய்ய கட்டம் கட்டமாக நடைபயணம் மேற்கொண்டுள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இதேவேளை இந்து சகோதரர்களும் இனமத பேதமின்றி நடை பயணத்தில் கலந்து கொண்டு மடு நோக்கி பயணிக்கின்றனர்.
இதேவேளை நடை பயணத்தில் கலந்துகொண்டுள்ள யாத்திரிகர்களின் சிரமம் கருதி குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மாந்தை கிழக்கு பிரதேச சபை செயற்படுத்தி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் ராசையா நளினி தெரிவித்தார்.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பக்த்தர்கள் முல்லைத்தீவு - மன்னார் எல்லை கிராம பாதையான பாண்டியன்குளம், நட்டாங்கண்டல், பாலம்பிட்டி சென்று அங்கிருந்து மடுவிற்கு செல்வதாக தெரிவித்துள்ளார்கள்.
--