Aug 13, 2025 - 11:48 AM -
0
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் அபிமன்யு ஈஸ்வரன் விரைவில் இடம்பெற வழி ஏற்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சவுரவ் கங்குலி வலியுறுத்தியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு அவர் அணிக்குள் வந்திருந்த போதிலும், இதுவரை அவரை தேசிய அணியில் இணைத்துக் கொள்ளாமை கவலையளிப்பதாக கொல்கத்தாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு சவுரவ் கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடரின் போது, ஷாய் சுதர்ஷன் மற்றும் கருன் நாயர் உள்ளிட்டோர் விளையாடிருந்தனர்.
எனினும் அவர்களால் குறித்த தொடரில் சோபிக்க முடியவில்லை.
அதேநேரம், டெஸ்ட் அணியில் மூன்றாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டத்தையே வீரர்களால் கட்டியெழுப்ப முடியாமல் போனதை அவதானிக்க முடிந்தது.
எனவே, அவ்வாறான சூழலில் அந்த இடத்திற்கு அபிமன்யு ஈஸ்வரன் பொருத்தமானவராக இருந்திருப்பார் எனவும் கங்குலி சுட்டிக்காட்டியுள்ளார்.
103 உள்ளூர் முதல்தர போட்டிகளில் விளையாடியுள்ள அபிமன்யு, 7,841 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.
அத்துடன் அபிமன்யு முதல் முறையாக அணியில் சேர்க்கப்பட்டதிலிருந்து, மொத்தமாக 15 வீரர்கள் அறிமுகமாகியுள்ளனர் என்ற போதிலும் அவர் இன்னும் அறிமுகமாகவில்லை.
அவரது வயது, திறமை என்பவற்றின் அடிப்படையில் அபிமன்யுவை டெஸ்ட்டில் விரைவில் அறிமுகப்படுத்த அணி நிர்வாக பரிசீலிக்க வேண்டும் எனவும் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.