Aug 13, 2025 - 11:52 AM -
0
மட்டக்களப்பிற்கு பாதுகாப்பு அமைச்சர் வருகை தரவுள்ள நிலையில், செம்மணி, முல்லைத்தீவு மற்றும் சட்டவிரோத சமூக செயற்பாடுகளுக்கு எதிராக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் இன்று (13) காந்தி பூங்காவில் நடைபெற்றது.
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் அழைப்பை அடுத்து, இன்று காலை 9.00 மணிக்கு காந்தி பூங்காவில் மக்கள் ஒன்றுகூடினர். இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், ஞா. சிறிநேசன், வைத்தியர் சிறிநாத், மட்டு மாநகர சபை முதல்வர், பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின்போது, 'முத்தையன்கட்டு இராணுவ முகாமில் படுகொலை செய்யப்பட்ட கபில்ராய்க்கு நீதி வேண்டும்', 'இராணுவமே வெளியேறு, வடக்கும் கிழக்கும் தமிழர்களின் தாயகம்', 'இராணுவமே வெளியேறு' போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக இன்று நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு அமைச்சரின் வருகையை முன்னிட்டு, நகரப் பகுதி, காந்தி பூங்கா மற்றும் பழைய கச்சேரி ஆகிய பகுதிகளில் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு, முக்கிய சந்திகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
--