Aug 13, 2025 - 12:37 PM -
0
2027 ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள ஒருநாள் உலக கிண்ணத் தொடருக்கான இந்திய குழாமில், விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பில்லை என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
அவர் தமது யூடியுப் தளத்தில் வௌியிட்டுள்ள காணொளி ஒன்றில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தவறான வடிவத்தில் தமது ஓய்வினை அறிவித்திருப்பதே பிரச்சினைக்கு வழிவகுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.பி.எல் தொடருக்கு முன்னர், இந்திய அணி 6 ஒருநாள் சர்வதேச போட்டிகளிலே விளையாடும்.
அப்படியென்றால், குறித்த இருவரும் 6 நாள் மாத்திரமே உடற் தகுதியுடன் இருந்திருக்கின்றார்கள் என அர்த்தம்.
இது உலக கிண்ணத் தொடர் ஒன்றுக்கு போதுமானதாக கருதப்படாது. எனவே அவர்கள் டெஸ்ட் போட்டிகள் தவிர்ந்து ஏனைய வடிவங்களில் ஏதேனும் ஒன்றில் ஓய்வு பெற்றிருந்தால், கூடுதலான நாட்கள் விளையாட கிடைத்திருக்கும்.
இதனால் அணியிலும் நீண்ட காலம் நீடித்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.
எனவே, விஜய் ஹசாரே தொடரில் பிரகாசித்தால் கோலியும், ரோகித்தும் உலக கிண்ண தொடருக்கு தெரிவு செய்யப்படுவார்கள் என்று கூறுவதெல்லாம் போலியானது என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரே, கோலியும், ரோகித்தும் விளையாடும் இறுதி போட்டியாக அமையும் என அண்மையில் தகவல்கள் வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
எவ்வாறாயினும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை எவ்வித முடிவுகளையும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.