Aug 14, 2025 - 09:50 AM -
0
இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்தில் புரட்சிகரமான மாற்றத்திற்கான தளத்தை அமைப்பதற்காக, 2025 செப்டம்பர் 29–30 திகதிகளில் நடைபெறவுள்ள முதலாவது தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டை அறிமுகப்படுத்தி, ஒரு புதிய யுகத்தை முன்னெடுக்கப்படவுள்ளது. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையமாக இலங்கையை நிலைநிறுத்துவதற்கான நாட்டின் மிகுந்த துணிச்சலான முயற்சியாக அமையவுள்ள இந்த முன்னோடியான நிகழ்வு, AI பயன்பாட்டை அனைத்து பொருளாதார துறைகளிலும் விரைவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு, செயற்கை நுண்ணறிவு சார்ந்த எதிர்கால நோக்கில் இலங்கையின் பயணத்தை முன்னெடுக்க உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான தேசிய தளமாக இருக்கும். 2025 ஆம் ஆண்டில் சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்படும் நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரத்தை, 2030 ஆம் ஆண்டிற்குள் 15 பில்லியன் அமெரிக்க டொலர்களாக விரிவாக்குவது எனும் மூலோபாயக் கண்ணோட்டத்துக்கு இது நேரடி ஆதரவை வழங்குவதாக அமையும். இந்த வளர்ச்சி பாதையில், AI இன் பங்களிப்பு 10 முதல் 12 சதவீதம் வரை அமைந்திருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், இலங்கையின் பொருளாதார மாற்றத்தின் முக்கிய அடித்தளமாக AI அமையும்.
டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் SLT-MOBITEL ஆகியவற்றின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று தரப்புக் கூட்டாண்மை, நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை மேம்படுத்த அவை காண்பிக்கும் அர்ப்பணிப்பான ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. SLASSCOM இன் பங்களிப்புடன் இந்த கைகோர்ப்புக்கு மேலும் வலிமை சேர்க்கப்பட்டுள்ளது. நிகழ்வின் Ecosystem பங்காளராக SLASSCOM இணைந்துள்ளதனூடாக, இலங்கையின் டிஜிட்டல் வெளியில் வளர்ச்சியை தூண்டுவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பு, இலங்கையின் விரிவான டிஜிட்டல் பொருளாதார இலக்குகள் மற்றும் நாட்டை பிராந்தியத் தொழில்நுட்ப முன்னோடியாக உருவாக்கும் நீண்டகாலக் கண்ணோட்டத்துடன் சிறப்பாக ஒத்திசைவாக உள்ளது. இதன் மூலம் அனைவரும் சமமாக பயனடையக்கூடிய உள்ளடக்கிய வளர்ச்சி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைவதை உறுதிசெய்யும்.
டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு, இலங்கையின் AI சார்ந்த எதிர்காலத்திற்கான அடித்தளத்தை ஏற்படுத்தவுள்ளது. இந்த நிகழ்வு, புதுமை, பொருளாதார வளர்ச்சி மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை ஏற்படுத்தும் ஊக்கியாக AI ஐ பயன்படுத்தி, இலங்கையை டிஜிட்டல் திறன் பெற்ற நாடாக மாற்றும் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. AI ஐ பின்பற்றுவதன் மூலம், பொறுப்புடன் AI ஏற்றுக்கொள்வதில் மற்றும் நடைமுறைப்படுத்துவதில் பிராந்தியத்தில் முன்னணி வகிக்கும் வகையில், இலங்கையை திட்டமிட்ட முறையில் மேம்படுத்தி வருகிறோம்.” என்றார். இரு நாட்கள் நடைபெறவுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு, SLT-MOBITEL நிறுவனத்தின் ஆதரவுடன், உலகத் தரத்திலான நவீன தொழில்நுட்பங்களை உள்ளூர் தொழில் துறைகளுக்கு கொண்டு வரும். இது, இலங்கையின் தொழில்நுட்ப எதிர்காலத்தை வடிவமைக்கும் AI புத்தாக்கங்களுக்கு, வணிக நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிலான அணுகலை வழங்கும். இந்த மாநாடு, இலங்கையின் AI பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பான AI ஆட்சி, நம்பிக்கை மற்றும் ஒழுக்கம், நடைமுறைப்படுத்தும் சவால்கள், வங்கித் துறை மற்றும் நிதி சேவைகள், சுகாதாரம், கல்வி, வேளாண்மை, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் போன்ற துறைகளில் துறைசார்ந்த பயன்பாடுகள் போன்ற அத்தியாவசிய தலைப்புகளை விவாதிக்கும்.
SLT-MOBITEL இன் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுகள் வழங்குனர் எனும் வகையில் SLT-MOBITEL, AI இன் ஆற்றலை நன்கு உணர்ந்துள்ளது. நாட்டின் டிஜிட்டல் எதிர்காலத்தை வழிநடத்துவது எமது பொறுப்பாக அமைந்துள்ளது. நாடு முழுவதிலும் ஏற்கனவே நாம் SLT- MOBITEL இன் சொந்த புத்தாக்கங்களான Hello AI மற்றும் AI Pazz போன்றவற்றினூடாக AI ஒருங்கிணைப்பை நாம் மேம்படுத்திய வண்ணமுள்ளோம். அதனூடாக, தினசரி வாழ்க்கை மற்றும் வியாபார செயற்பாடுகளை ஸ்மார்ட்டான தொழினுட்பங்கள் எவ்வாறு மேம்படுத்தும் என்பதை வெளிப்படுத்தி வருகிறோம். தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாட்டினூடாக, சகல சமூகங்களையும் சேர்ந்த ஒவ்வொரு இலங்கையருக்கும் AI புரட்சியில் பங்கேற்று அதன் பலனை அனுபவிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எம்மை அர்ப்பணித்துள்ளோம். இது, அனைவர் இணைந்து பயனடையும் வகையில், முழுமையாக டிஜிட்டல் மயமான மற்றும் செழிப்பான இலங்கையை உருவாக்குவதற்கான எங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க பங்களிப்பாக இருக்கும். எதிர்வரும் செப்டெம்பர் மாத நிகழ்விலும், இந்தப் பயணம் முழுதும், அனைத்து முக்கிய பங்குதாரர்களின் பங்கேற்பை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.
இந்த மாநாட்டின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலங்கையின் பரந்த AI நோக்கத்திட்டத்தை வெளியிடுவார் என்பதுடன், தேசிய AI நிதியம் மற்றும் AI சிறப்புக்கான நிலையம் ஆகியவற்றையும் அறிமுகம் செய்வார்.
பிராந்தியத்தின் போட்டிகரமான AI மையமாக இலங்கையை திகழச் செய்யும் வகையில், இந்நிகழ்வில் கண்காட்சிகள், முக்கிய உரைகள் மற்றும் நடைமுறைப் பயிற்சிப் பணிமனைகள் அடயிருந்க்கும். உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் சிந்தனைத் தலைவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள். அதில், Huawei நிறுவனத்தின் மத்திய கிழக்கு பிராந்தியத் தலைவர் லி ஷி, AI அடித்தளத் தீர்வுகள், தொலைத்தொடர்பு cloud மூலோபாயங்கள் மற்றும் 5ஜி ஒருங்கிணைப்பு குறித்த முக்கிய உரையை வழங்குவார். Meta நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா பிராந்திய துணைத் தலைவர் சந்தியா தேவநாதன் மற்றும் உலகளாவிய வலைப்பின்னல் நிறுவனங்களின் முகவர் கிம்-லெங் ஹோஃவு ஆகியோரின் மூலம், சமூக வலைதளங்களில் மற்றும் வணிக மாற்றத்தில் AI இன் பயன்பாடுகளை முன்னிறுத்தி அறிமுகப்படுத்தப்படும். இந்த தொழில்நுட்பசார் நிபுணர்கள் நிகழ்வில் கலந்து கொள்வதனூடாக, இலங்கையின் வணிகத் துறைக்கு உலகத் தரமான AI தொழில்நுட்பங்களை நேரடியாக அணுகும் வாய்ப்பை வழங்கி, ஆதரவளிக்கும் தளமாக அமைந்திருக்கும்.
இந்நிகழ்ச்சியில் விவசாயம், சுகாதாரம், நிதி மற்றும் வங்கி, கல்வி, உற்பத்தி, போக்குவரத்து, மின்னணு வணிகம், காப்பீடு, விருந்தினர் பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை போன்ற முக்கிய துறைகளில் AI பயன்பாடுகள் விரிவாக பரிசீலிக்கப்படும். இதில் தேசிய AI கொள்கை வடிவமைப்பு, பொறுப்பான AI ஆட்சி மற்றும் நெறிமுறைகள், AI நடைமுறைச் செயல்படுத்தல் சவால்கள், திறன் வளர்ச்சி, துறைசார்ந்த பயன்பாடுகள் ஆகியவை முக்கியக் கருத்துக்களாகக் கையாளப்படும். மேலும், மொழி செயலாக்கம், பண்பாட்டு ஒத்திசைவு மற்றும் தலைமுறை இடைவெளியை நிரப்புதல் போன்ற உள்ளூர் சவால்களில் விசேட கவனம் செலுத்தப்படும். அத்துடன், சுகாதாரம், கல்வி மற்றும் பொதுச் பாதுகாப்பு போன்ற மக்கள் சேவைகளில் AI பயன்பாடு, சிறு மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் மற்றும் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கான AI விரிவாக்க தீர்வுகளும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.
இந்தத் திட்டத்தின் இரண்டாம் கட்டம் நவம்பர் 2025 முதுல் மே 2026 வரை முன்னெடுக்கப்படவுள்ளது. அதன் போது யாழ்ப்பாணம், அனுராதபும், கண்டி மற்றும் மாத்தறை போன்ற பிராந்திய மையங்களுக்கு விரிவாக்கப்பட்டு, நாட்டின் ஒவ்வொரு பாகத்திலும் AI அறிவை பின்பற்றும் இலக்கை எய்துவதில் பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இது, இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் எந்த ஒரு சமூகத்தையும் பின்வாங்க விடாமல் அரசாங்கம் முழுமையாகப் பணியாற்றும் உறுதியைக் குறிப்பிடுகிறது.
சமூகத்தின் சகல துறைகளுக்கும் டிஜிட்டல் ரீதியில் அறிவூட்டப்பட்ட வாழ்க்கைமுறையை மேம்படுத்தக்கூடிய மற்றும் செயற்படுத்தக்கூடிய தொழினுட்பத் தீர்வுகளை வெளிப்படுத்தி, சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் நுண், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளுக்கு ஆதரவளிக்க இந்த தேசிய AI மாநாடு எதிர்பார்க்கிறது. AI புத்தாக்க சிறப்புக்காக ஜனாதிபதி விருதுகளினூடாக கௌரவிப்பு வழங்கப்படும் நிலையில், இலங்கையின் புத்திகூர்மைத்தன்மையை கொண்டாடி, AI அப்ளிகேஷன்களின் தொடர்ச்சியாக மேம்படுத்தல்களை ஊக்குவிப்பதாகவும் அமைந்திருக்கும்.
மாநாட்டின் போது, பரந்து விரிந்த வலைப்பின்னல் வாய்ப்புகள், கல்விசார் நிறுவனங்கள், ஆரம்பநிலை நிறுவனங்கள், முன்னணி நிறுவனங்கள், உள்ளூர் புதுமையாளர்கள் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களுக்கிடையில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும். இதன் மூலம் இலங்கை பிராந்திய AI மையமாக வளரக்கூடிய வாய்ப்பு உருவாகும்.
தேசிய AI கண்காட்சி மற்றும் மாநாடு 2025 பற்றிய மேலதிக தகவல்களை AIEXPO.LK இல் பார்வையிடலாம்.

