Aug 14, 2025 - 10:52 AM -
0
2025 ம் ஆண்டின் முதற்பாதியில் வலுவான பெறுபேறுகள் குறித்து DFCC வங்கி அறிவித்துள்ளது. வங்கி மட்டத்தில் வரிக்குப் பின்னரான வருமானம் ரூபா 10.5 பில்லியனை எட்டியுள்ளதுடன், Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தில் அது கொண்டிருந்த 50% பங்குகளை விற்பனை செய்ததால் கிடைக்கப்பெற்ற ஒரு தடவை ஆதாயமும் இதில் அடங்கியுள்ளது. குழும பிரதான வணிகத்தின் வரிக்குப் பின்னரான இலாபம், ரூபா 5.7 பில்லியனாகக் காணப்பட்டது. மொத்தச் சொத்துக்கள் 11% ஆல் வளர்ச்சி கண்டு ரூபா 788 பில்லியனை எட்டியுள்ளதுடன், கடன் துறையில் ஏற்பட்ட 19% வளர்ச்சியுடனான ரூபா 469 பில்லியன் பங்களிப்பு இதன் உந்துசக்தியாக அமைந்துள்ளது. தேறிய வட்டி வருமானம் 11% ஆல் அதிகரித்து. ரூபா 15.17 பில்லியனாக பதிவாக்கப்பட்டுள்ளதுடன், மூலோபாயரீதியான கடன் விஸ்தரிப்பு மற்றும் கடன் வழங்கல் செலவுகளின் உச்சப்பயனாக்கம் இதற்கு துணைபுரிந்துள்ளன. இதற்கிடையில் நடைமுறைக்கணக்கு-சேமிப்புக்கணக்கு (CASA) விகிதமானது 26.54% ஆக மேம்பட்டுள்ளது.
குழும மட்டத்தில், மொத்த மூலதன போதுமை விகிதமானது 15.004% ஆக பேணப்பட்டுள்ளதுடன், பொறுப்புக்களைத் தீர்ப்பதற்கான திரவச் சொத்து கையிருப்பு உள்ளடக்க விகிதம் 187.47% ஆகவும், தேறிய ஸ்திரத்தன்மை கடன் வழங்கல் விகிதம் 112.81% ஆகவும் காணப்பட்டதுடன், இவை அனைத்தும் ஒழுங்குமுறைத் தேவைப்பாடுகளை விடவும் போதிய அளவில் சிறப்பான மட்டத்தில் காணப்படுகின்றன.
கட்டம் 3 செயல்திறனற்ற கடன் விகிதம் 2024 ன் முடிவில் காணப்பட்ட 5.65% இலிருந்து 4.62% ஆக மேம்பட்டுள்ளமை, வலுவான மீள் அறவீட்டு செயற்பாடுகள் மற்றும் கடன் வழங்கல் துறையின் தரம் ஆகியவற்றைப் பிரதிபலிக்கின்றது.
முதற்பாதியில் DFCC வங்கியின் இஸ்லாமிய வங்கிச்சேவைப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பிரத்தியேக மகளிர் வங்கிச்சேவைப் பிரிவான DFCC ஆலோக 100,000 வாடிக்கையாளர்கள் என்ற இலக்கினைக் கடந்துள்ளது. கொழும்பு, லக்சம்பேர்க், மற்றும் இந்தியாவின் GIFT City இலுள்ள NSE IX ஆகிய மூன்று பட்டியல்களில் நிரற்படுத்தப்பட்டுள்ள அதன் பசுமைப் பிணைமுறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. 2025 ம் ஆண்டில் தனது 70 ஆண்டுகள் சேவை நிறைவை இவ்வங்கி கொண்டாடுவதுடன், வாடிக்கையாளர்கள் மற்றும் பரந்த சமூகம் ஆகியோருக்கு உதவுவதற்காக, நீடித்த வளர்ச்சி, நிதியியல் ரீதியாக அனைவரையும் அரவணைத்தல், நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகின்ற புத்தாக்கம் ஆகியவற்றில் அது தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளது.

