Aug 14, 2025 - 06:22 PM -
0
அமெரிக்காவின் பசிபிக் கடற்கரையில் உள்ள காஸ்கேடியா மண்டலம் என அழைக்கப்படும் பகுதியில் மெகா சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக வர்ஜீனியா டெக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
வடக்கு கலிபோர்னியாவிலிருந்து வான்கூவர் தீவு வரை சுமார் 600 மைல்கள் நீளமுள்ள இந்தப் பகுதி, பாரிய நிலநடுக்கங்களை உருவாக்கக்கூடிய மண்டலமாக உள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அடுத்த 50 ஆண்டுகளில் காஸ்கேடியா மண்டலத்தில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட அளவு கொண்ட நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சுமார் 15% வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இத்தகைய நிகழ்வு திடீரென ஏற்பட்டால், நிலநடுக்கத்தால் ஏற்படும் நிலச்சரிவு மற்றும் கடலடி இடப்பெயர்ச்சியால் சுமார் 30 முதல் 100 அடி உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகக்கூடும்.
இது அமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்களுக்கு முன்னோடியில்லாத ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், அப்பகுதியின் சுற்றுச்சூழல் அமைப்பில் பெரும் மாற்றங்களை உருவாக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த மெகா சுனாமி ஏற்பட்டால், சுமார் 10,000 முதல் 30,000 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர்.
மேலும், சுமார் 170,000 கட்டிடங்கள் மற்றும் சொத்துக்கள் சேதமடையக்கூடும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.எனவே, வர்ஜீனியா டெக் விஞ்ஞானிகள், அதிகாரிகள் இந்த நிலைமைக்குத் தயாராக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.