Aug 15, 2025 - 11:38 AM -
0
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் படம், கூலி. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருக்கிறார், லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியான இப்படத்தைப் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ், மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர், முதன்முறையாக ரஜினிகாந்தை வைத்து கூலி படத்தை இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்தின் 50 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில், இப்படம் அவரது முதல் படமான அபூர்வ ராகங்கள் வெளியான அதே தினமான ஓகஸ்ட் 15 ஆம் திகதி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ளது.
கூலி படத்தின் அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக, பூஜா ஹெக்டே நடனமாடிய “மோனிகா” பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ளது.
படத்தில் ஒரு ஃப்ளாஷ்பேக் காட்சி இடம்பெற்றுள்ளது, இதில் ரஜினிகாந்தின் முகம் கிராஃபிக்ஸ் மூலம் இளமையாக மாற்றப்பட்டு, ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.
கூலி படத்தின் விமர்சனங்கள் கலவையானவை. ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் ஒரு பெரிய விருந்தாக அமைந்தாலும், பொதுவான சினிமா ரசிகர்கள் சிலர் படத்தின் கதைக்களம் மற்றும் திரைக்கதையில் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறுகின்றனர்.
கூலி திரைப்படம் இந்தியாவில் முதல் நாளில் சுமார் 65 கோடி ரூபாய் வசூலித்ததாகவும், உலகளவில் 130 கோடி ரூபாய் வரை வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா, சிங்கபூர் உள்ளிட்ட பல நாடுகளில் படம் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், இந்த வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
வட அமெரிக்காவில் கூலி படத்தின் முன்பதிவு விற்பனை 2.5 மில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது, இது கபாலி படத்தின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது.