விளையாட்டு
அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

Aug 16, 2025 - 04:25 PM -

0

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணிதலைவரும், பயிற்சியாளருமான பாப் சிம்ப்சன், தனது 89 ஆவது வயதில் காலமானார். 1987 இல் அவுஸ்திரேலியா தனது முதல் உலகக் கிண்ணத்தை வென்றபோது, அதன் பின்னணியில் முக்கிய புள்ளியாக செயல்பட்டவர் இவரே.

 

ஒரு வீரராக, அணி தலைவராக,பயிற்சியாளராக அவுஸ்திரேலிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றிய பாப் சிம்ப்சனின் மறைவு, கிரிக்கெட் உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

1957 முதல் 1978 வரை 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பாப் சிம்ப்சன், 4,869 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 10 சதங்களும் அடங்கும். வலது கை துடுப்பாட்ட வீரரான இவர், லெக் ஸ்பின் பந்துவீச்சிலும் சிறந்து விளங்கி 71 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

 

ஸ்லிப் திசையில் ஃபீல்டிங் செய்வதில் இவரை மிஞ்ச ஆளில்லை என்று கூறும் அளவுக்கு தலைசிறந்த ஃபீல்டராகவும் திகழ்ந்தார். 


1964 இல் இங்கிலாந்துக்கு எதிராக மான்செஸ்டரில் நடந்த போட்டியில் பாப் சிம்ப்சன் அடித்த 311 ஓட்டங்கள், அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சமாக கருதப்படுகிறது. அவுஸ்திரேலிய அணிக்காக முச்சதம் அடித்த வெகு சில வீரர்களில் இவரும் ஒருவர். 1968 இல் ஓய்வு பெற்ற பாப் சிம்ப்சன், கிரிக்கெட்டில் உலகத் தொடர் (World Series Cricket) நெருக்கடி ஏற்பட்டபோது, தனது 41 ஆவது வயதில் மீண்டும் அணிக்கு திரும்பி அணி தலைவராக பொறுப்பேற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

 

கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, 1986 இல் அவுஸ்திரேலிய அணியின் முதல் முழுநேரப் பயிற்சியாளராக பாப் சிம்ப்சன் பொறுப்பேற்றார். அப்போது தடுமாற்றத்தில் இருந்த அவுஸ்திரேலிய அணியை, உலகின் சக்திவாய்ந்த அணியாக மாற்றிய பெருமை இவரையே சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

பலரும் பாப் சிம்ப்சனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாப் சிம்ப்சனின் பங்களிப்பு, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை.

Comments
0

MOST READ
01
02
03
04
05