Aug 18, 2025 - 05:14 PM -
0
தெற்காசியப் பிராந்தியத்திலுள்ள இளம் தலைவர்களை வலுவூட்டுதல், அமைதியை ஊக்குவித்தல், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்காகக் கொண்ட அமெரிக்க அரசாங்க நிதியுதவியுடன் கூடிய ஒரு நிகழ்ச்சித்திட்டமான இளம் தெற்காசிய தலைவர்கள் முன்முயற்சியின் (Young South Asian Leaders Initiative - YSALI) ஆரம்ப செயலமர்வினை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ ஜே. சங், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளராக பதில் கடமை புரியும் ஷெல்லி சீவர் மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் கௌரவ சுனில் கமகே ஆகியோர் இன்று (18) ஆரம்பித்து வைத்தனர்.
இதில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கத்தின் முந்தைய முன்முயற்சிகளில் இதற்கு முன்பு பங்குபெற்ற முன்னாள் மாணவர்களிலிருந்து போட்டி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 80 இற்கும் மேற்பட்ட பற்கேற்பாளர்கள், வணிகம், அரசாங்கம், கல்வித்துறை, சுகாதாரம் மற்றும் பிற துறைகளில் தெற்காசியாவின் அடுத்த தலைமுறை தலைவர்களையும், புத்தாக்குநர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தினர். அவர்களை பிராந்தியம் முழுவதிலுமுள்ள எதிரிணை சகாக்களுடன் இணைப்பதன் மூலம், அமெரிக்காவானது நீடித்து நிலைக்கும் தொடர்பு வலையமைப்புகளை கட்டியெழுப்புவதுடன், எதிர்கால பங்காளர்களையும், அமெரிக்க வணிகங்கள் மற்றும் பகிரப்பட்ட நலன்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் வளர்த்து வருகிறது.
இதில் கலந்துகொண்டோர் மத்தியில் உரையாற்றிய இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங்,
பெரும்பாலும் சவாலான சூழ்நிலைகளில், மாற்றத்தை உருவாக்குவதற்கான முன்முயற்சியினை மேற்கொண்டு, அமெரிக்க அரசாங்க பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களில் ஏற்கெனவே பங்கேற்றதன் மூலம் நீங்கள் ஒவ்வொருவரும் தலைமைத்துப் பண்பினை நிரூபித்துள்ளீர்கள். இப்போது, இங்கு ஒன்றுகூடுவதன் மூலம், இப்பிராந்தியத்தின் எதிர்காலத்தினை வடிவமைப்பதற்காக உங்களது சிந்தனைகள், திறமைகள் மற்றும் கனவுகளை ஒன்றிணைக்கிறீர்கள். நீங்கள் தொழில்முயற்சியாண்மை, குடிமை ஈடுபாடு அல்லது சமூக புத்தாக்கம் போன்ற எதில் கவனம் செலுத்தினாலும், உங்களது முயற்சிகளை ஆதரிப்பதற்கும், அமெரிக்க புத்தாக்கத்திற்கும், அதனது மேன்மைக்கும் உந்து சக்தியாக விளங்கிய சிந்தனைகள் மற்றும் அணுகுமுறைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நாங்கள் விரும்புகிறோம்.
ஏனெனில் நீங்கள் வெற்றிபெறும்போது, இந்தோ-பசிபிக் பிராந்தியமானது, அனைவருக்கும் பலமானதாகவும், இன்னுமதிகம் இணைக்கப்பட்டதாகவும், இன்னுமதிகம் வளமானதாகவும் மாறும் எனத் தெரிவித்தார்.
மூன்று நாட்கள் இடம்பெறும் இச்செயலமர்வானது, பொருளாதார அபிவிருத்தி, குடிமைப் பங்கேற்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு உட்பட பகிரப்பட்ட சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்கொள்வதற்காக, பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைதீவு, நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த 80இற்கும் மேற்பட்ட இளம் தலைவர்களை ஒன்றிணைக்கிறது.
இச்செயலமர்வின் போது, தொழில்முயற்சியாண்மை மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றில் அமெரிக்க நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட ஊடாடும் அமர்வுகளில் நிபுணர்கள், வணிகப் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகளுடன் பங்கேற்பாளர்கள் இணைந்து செயற்படுவர்.
இரு பிராந்தியங்களிலும் வணிக வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் மற்றும் முக்கியமான சவால்களை எதிர்கொள்ளல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அதே வேளை, எல்லை தாண்டிய ஒத்துழைப்பு மற்றும் அமெரிக்காவிற்கும் தெற்காசியாவிற்கும் இடையிலான உறவுகள் ஆகியவற்றையும் இந்நிகழ்ச்சி வலுப்படுத்தியது.
பங்கேற்பாளர்கள் முக்கியமான பயிலரங்க அமர்வுகளுக்கு மேலதிகமாக, அமெரிக்க வணிகங்கள், குடிமை முன்முயற்சிகள் மற்றும் தொழில்முனைவு செயற்திட்டங்கள் ஆகியவற்றை காட்சிப்படுத்துவதற்காக உள்ளூர் அமைப்புகள், அமெரிக்க பங்காளர்கள் மற்றும் இந்நிகழ்ச்சித் திட்டத்தின் முன்னாள் மாணவர்கள் ஆகியோரை ஒன்றிணைத்த YSALI Expo கண்காட்சியிலும் பங்கேற்றனர்.
ஒருவருக்கொருவர் தொடர்புகளை ஏற்படுத்தும் ஒரு மையமாகவும், இளம் தலைவர்கள் மற்றும் பிராந்திய பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பினை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இந்த YSALI Expo விளங்கும்.
YSALI நிகழ்ச்சித்திட்டம் பற்றி 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரின் போது தொடங்கப்பட்ட YSALI, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் மிகவும் புதிய இளைஞர் முன்முயற்சியாகும். தெற்காசியாவில் உள்ள இளம் தலைவர்களுக்கு, நேர்மறையான பிராந்திய இணைப்புகளை உருவாக்குவதற்கும், பொருளாதார அபிவிருத்தியினை ஊக்குவிப்பதற்கும், அவர்களின் சமூகங்களை வலுப்படுத்துவதற்கும் தேவையான கருவிகள், வளங்கள் மற்றும் தொடர்பு வலையமைப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களை வலுவூட்டுவதே இந்நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமாகும்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஏனைய பொருளாதார நிகழ்ச்சித் திட்டங்களை YSALI முழுமையாக்குவதுடன் பிராந்திய ஒத்துழைப்பினையும் அபிவிருத்தியினையும் பேணி வளர்ப்பதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினையும் அது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.